Aran Sei

`சிறையில் இருக்கும் வரவர ராவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்’ : உயர் நீதிமன்றம் உத்தரவு

Credits New Indian Express

உடல்நலக் குறைவு காரணமாக வரவர ராவ் மும்பை டலோஜா சிறையில் இருந்து நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசியமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

81 வயதான கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் வரவர ராவ், பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வயது மூப்பு மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக வரவர ராவ் நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

படுத்த படுக்கையாக இருக்கும் வரவர ராவ், பொருத்தப்பட்ட சிறுநீர்ப்பை மூன்று மாதங்களுக்கு மேலும் மாற்றப்படாமல் சிறுநீர் குழாயில் தொற்று ஏற்பட்டு, பராமரிக்க யாரும் இல்லாமல் சிறையில் மிகவும் மோசமான நிலையில் அவதிப்படுகிறார் என்று வழக்கறிஞர் இந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருவேளை அவர் சிறையில் இறக்க நேர்ந்தால் அது காவலில் இறந்தது ஆகும் எனவும் நீதிமன்ற விசாரணையின்போது வழக்கறிஞர் இந்திரா சுட்டிக்காட்டியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஷிண்டே மற்றும் மாதவ் ஜம்தர் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்துள்ளது.

காணொலி மூலமாக வெறும் 15 நிமிடங்களுக்குள் செய்யப்பட்ட பரிசோதனை எந்த வகையிலும் பயனளிக்காது. அவருக்கு விரிவான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் இந்திரா கூறியதை நீதிமன்றம் ஆமோதித்துள்ளது.

“வரவர ராவ் கிட்டத்தட்ட இறக்கும் தறுவாயில் இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லை இல்லை, டலோஜா சிறையிலேயே சிகிச்சை அளிக்கிறோம் என்று மாநில அரசு கூற முடியுமா? வரவர ராவ் இரண்டு வாரங்களுக்கு நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்.” என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

மேலும், நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யக் கூடாது எனவும், மருத்துவ அறிக்கைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஜேஜே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தீபக் தாக்ரே முன்வைத்த வாதத்துக்கு, அங்கே வரவர ராவ் முறையான பராமரிப்பின்றி முன்னர் அவதிப்பட்டார் என்பதை வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நினைவுகூர்ந்துள்ளார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் தீபக் தாக்ரே, “வரவர ராவை நானாவதி சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இது ஒரு சிறப்பு வழக்காகக் கருதப்பட வேண்டுமே தவிர இதுவே தொடரக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்