Aran Sei

முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை: வரவர ராவின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Credits The Federal

வரவர ராவை பரிசோதித்த மருத்துவர்களின் அறிக்கை வெறும் கண்துடைப்பு என்று வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவைச் சேர்ந்த, 81 வயது எழுத்தாளர் கவிஞர் வரவர ராவ் பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுநீர் பை பொறுத்தப்பட்ட நிலையில், முறையாக மாற்றப்படாமல் சரியான பராமரிப்பு இன்றி வரவர ராவ் சிறையில் மிகவும் இழிவான நிலையில் நடத்தப்படுவதாக அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஸ்டேன் சாமி கூறியிருந்தார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி, நானாவதி மருத்துவர்கள் காணொலி மூலம் வரவர ராவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

அவசியப்பட்டால் தலோஜா சிறைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், நானாவதி மருத்துவர்கள் கொடுத்துள்ள வரவர ராவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்றும் நீதிமன்ற உத்தரவுபடி அதில் சோதனை முடிவுகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா முறையிட்டுள்ளார்.

நவம்பர் 12-ம் தேதி கிடைத்திருக்க வேண்டிய மருத்துவ அறிக்கை இன்று மதியம் 1 மணிக்குதான் மனுதாருக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் ஷிண்டே மற்றும் மாதவ் ஜம்தர் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது.

நானாவதி மருத்துவர்களின் பரிசோதனை வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்தது, வரவர ராவுக்கு நரம்பு மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தும் சிறுநீரக மருத்துவர் அல்லது நரம்பியல் நிபுணர் அவரை பரிசோதனை செய்யவில்லை என்பதையும் இந்திரா சுட்டிக் காட்டியதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 12-ம் தேதி நானாவதி மருத்துவமனை பரிந்துரை செய்த பரிசோதனைகளே இன்னும் செய்யப்படவில்லை என்றும் தலோஜா சிறையில் அதற்கான போதிய வசதிகள் இல்லை என வழக்கறிஞர் இந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.

உடனடியாக வரவர ராவ் தலோஜா சிறையில் இருந்து நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகளிடம் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறினால் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பேசுவது கேட்க முடியாமல் போனதால், நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்பட வேண்டும், எந்த வகையிலும் இதில் தாமதம் ஏற்படக்கூடாது என இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, நேரடி வழக்கு விசாரணை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்