Aran Sei

உத்தர்காண்ட் பனிப்பாறை உடைப்பு பேரழிவு – பருவநிலை மாற்றம் காரணம்

Image Credit : thehindu.com

மயமலையின் நந்தாதேவி சிகரத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பின் காரணமாக உத்தர்காண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா ஆற்றிலும் தவுலிகங்கா ஆற்றிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. இந்தப் பேரழிவில், 7 பேர் உயிரிழந்ததாகவும் 125 பேர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

நந்தா தேவி பனிப்பாறை ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தவுலி கங்காவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கும், நீர்த்துளிகளின் மூட்டமும் நிரம்பிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின.

13.2 மெகாவாட் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தவுலிகங்கா ஆற்றில் தபோவன் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டவுடனேயே தபோவன் நீர்மின் நிலையத்துக்கான சுரங்கத்தில் இருந்து எட்டு பேர் தப்பி விட்டிருக்கின்றனர். சுரங்கத்தில் சிக்கியிருந்த எஞ்சிய 12 பேரை 250 பேர் கொண்ட இந்திய திபெத் எல்லைக் காவல்படையினர் 7 மணி நேரத்துக்கு மேல் போராடி மீட்டிருக்கின்றனர்.

இன்னொரு சுரங்கத்தில் 50-60 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் 12 பேர் தப்பிவிட முடிந்தது. இன்னும் 50 பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என்று இந்திய திபெத் எல்லை காவல் படைத் தளபதி வேணுதார் நாயக் கூறியுள்ளார்.

அதிகப்படியான வெள்ளநீர், தவுலிகங்கா வழியாக அகல்நந்தா ஆற்றில் சென்று அதன் ஓரமாக உள்ள கிராமங்களையும் அலக்நந்தா ஆற்றில் உள்ள நீர்மின் திட்டங்களையும் பாதிக்கும் என்ற அச்சம் உள்ளதாகவும் தி ஹிந்து தெரிவிக்கிறது.

ஆனால், மேலும் மழை பெய்வதற்கான முன்னறிவிப்பு எதுவும் இல்லை என்று இந்திய காலநிலை துறை தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் கங்கை ஆறும் அதன் துணை ஆறுகளும் ரிஷிகேஷ், ஹரித்வார், ருத்ரபிரயாக், கர்ணபிரயாக் போன்ற பல முக்கியமான சுற்றுலா தலங்கள் வழியாக பாய்கின்றன.

தவுலிகங்கா உத்தரகாண்டின் மிகப்பெரிய பனிப்பாறை ஏரியில் தோன்றி நந்தா தேவி தேசிய பூங்கா வழியாக பாய்ந்து அலக்நந்தா ஆற்றில் போய்ச் சேருகிறது.

அலக்நந்தா ஆறு கேதார்நாத் அருகில் உள்ள தேவபிரயாகில் கங்கையுடன் சேர்கிறது. அதைத் தொடர்ந்து கங்கை ஆறு, ரிஷிகேஷ் போன்ற முக்கியமான மையங்கள் வழியாக பாய்ந்து சென்று ஹரித்வாரில் கங்கை சமவெளிக்குள் இறங்குகிறது. பின்னர், தெற்கு நோக்கிச் சென்று பிஜ்னோரை தாண்டிச் சென்று கிழக்கு நோக்கி திரும்பி கான்பூரை நோக்கிச் செல்கிறது.

இமயமலை ஆறுகள் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான பகுதிகள் வழியாக பாய்கின்றன. ஆனால், பிற இமயமலை நதிகளைப் போலவே தவுலிகங்கா ஆற்றின் குறுக்கேயும் அணைகள் கட்டப்பட்டுள்ளன.

உத்தரகாண்டின் பிதோராகர்-ல் தேசிய நீர்மின் கழகத்தின் 280 மெகாவாட் மின் நிலையம் தவுலிகங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

பனிப்பாறை உருகுவதற்கான காரணம் பூமி வெப்பமயமாதல் என்று நிபுணர்கள் தெரிவித்திருப்பதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது. இதன் காரணமாக, பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கையும் பரப்பளவும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், புதிய ஏரிகள் செங்குத்தான, நிலைத்தன்மையற்ற மலைச் சரிவுகளுக்கு அருகில் உருவாவதற்கு வாய்ப்பு அதிகமாகும் என்றும், அத்தகைய சூழலில் உடைப்புகள் எளிதாக தூண்டப்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“இத்தகைய பனிப்பாறை ஏரி உடைப்பு மிகவும் அரியது” என்று ஐ.ஐ.டி இந்தூரின் பனிப்பாறையியல் மற்றும் நீரியல் பிரிவின் துணை பேராசிரியர் ஃபரூக் அசம் கூறியுள்ளார்.

“செயற்கைக் கோள் படங்களிலும், கூகிள் எர்த் படங்களிலும் அந்தப் பகுதியில் பனிப்பாறை ஏரி எதுவும் இருப்பதாகக் காட்டவில்லை. ஆனால், பனிப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள நீர் தேக்கங்கள் உடைந்து இது நடந்திருக்கலாம். மேலும் பகுப்பாய்வு, காலநிலை அறிக்கைகள், தரவுகள் கிடைத்த பிறகே இதை உறுதி செய்ய முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்