Aran Sei

உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு

credits : the hindu

த்தர பிரதேசத்தில், இஸ்லாமியரை திருமணம் செய்ததற்காக கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் நேற்று விடுவிக்கப்பட்டார். மூன்று மாத கர்ப்பிணியான அவர் தனக்கு ‘கருச்சிதைவு’ ஏற்பட்டு விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளர் அலுவலகம் சென்ற தம்பதியை (ரஷித் மற்றும் பிங்கி) தடுத்த பஜ்ரங் தளத்தின் நிர்வாகிகள், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல் நிலைய வளாகத்திற்குள் 22 வயதான பிங்கி, பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்களால் மிரட்டப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

செய்தியாளர்களிடம் பேசிய பிங்கி ”எனக்கு 22 வயது ஆகிறது. எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கடந்த ஜுலை 24-ம் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.” என்று தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளதையும் அவர் கூறிள்ளார்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

உத்தர பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழ் ரஷித் மீதும் அவரது சகோதரர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரஷித்தின் மனைவி பிங்கி, உத்தரப் பிரதேச காவல்துறையால் அரசு காப்பகமான நாரி நிகேதனில் தங்க வைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பிங்கியை நேற்று விடுவித்துள்ளார். ரஷித்தும் அவரது சகோதரரும் இன்னும் விசாரிக்கப்படாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“காதல் வயப்படுவது குற்றமல்ல. காதல் வயப்படுபவர்களுக்கு சாதி இனம் என்பது ஒரு பொருட்டே அல்ல” என பிங்கி தி இந்துவிடம் தெரிவித்துள்ளார். ”எனக்கு அந்தப் பையனை நன்றாக தெரியும், அவனின் சாதி, மதம் என அவரைப் பற்றி அனைத்தும் எனக்குத் தெரியும்” எனவும் பிங்கி கூறியுள்ளார்.

“நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனவும் பிங்கி கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. “நிரபராதிகளான தனது கணவரும் அவரின் சகோதரரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என பிங்கி வலியுறுத்தியுள்ளார்.

கணவனிடமிருந்து பிரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – காப்பகத்தில் இருந்து விடுதலை

கடந்த டிசம்பர் 5-ம் தேதி நாரி நிகேதன் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட பிங்கி வயிற்று வலியினாலும் ரத்தப்போக்கினாலும் அவதிப்பட்டு வருவதாக அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்படாமல்,  மூன்று நாட்களுக்குப் பிறகு உடல்நிலை மோசமடைந்த பின்னர் தான், மொராதாபாத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் தனக்கு சில ஊசிகள் போடப்பட்ட பின்னர், அவரது இரத்தப்போக்கு மோசமடைந்ததது எனவும் அவர் கூறியுள்ளார்.

“எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது,” என்று பிங்கி குற்றம் சாட்டியுள்ளார். பிங்கியின் குற்றச்சாட்டு இன்னும் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படவில்லை.

ஊசிகள் செலுத்தப்பட்டதால் கருச்சிதைவு ஏற்பட்டிருக்குமோ என்ற பிங்கியின் கூற்றை மகளிர் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நிர்மலா பதக் நிராகரித்துள்ளார். “நோயாளி லேசான ரத்தப்போக்குடனும் வயிற்று வலியுடனும் மருத்துவமனைக்கு வந்தார். ரத்தப்போக்கை நிறுத்தவும் வயிற்று வலியை குறைக்கவும் ஊசிகள் போட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

பிங்கி கருச்சிதைவு தொடர்பாக இன்னும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. இந்த முறை அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்