Aran Sei

மாந்திரீக மூடநம்பிக்கையால் தொடரும் துயரம்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமி கொலை

Credits Wikimedia Commons

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமையைக் கடத்திக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கான்பூரின் கதம்பூர் என்ற கிராமத்தில், தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் பட்டாசு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்ற 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுமியைக் கடத்திக் கொன்ற சம்பவம் தொடர்பாக, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்குல் குரில் மற்றும் பீரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரசுராம் என்பவர் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமியின் கல்லீரலை வெட்டி எடுத்து வரக் கூறியதால் இரண்டு பேரும் சிறுமியைக் கொன்று கல்லீரலை எடுத்து பரசுராமிடம் கொடுத்ததாக தி வயர் குறிப்பிட்டுள்ளது. இதற்காக பரசுராம் அன்குல் மற்றும் பீரனுக்கு 1500 ரூபாய் கூலி கொடுத்துள்ளார்.

சிறுமியின் கல்லீரலைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாந்திரீக வேலைகளுக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் செய்தியில் கூறியுள்ளது.

இது குறித்து காவல் ஆய்வாளர், “குற்றத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பேரும் நன்றாகக் குடித்துவிட்டு அந்தச் சிறுமியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டிருக்கிறார்கள். பின்னர் சிறுமியைக் கொன்று வயிற்றை அறுத்து கல்லீரலை பரசுராமிடம் கொண்டு கொடுத்திருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பரசுராமின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாந்திரீக வேலைகளுக்காக சிறுமி கொல்லப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு தடயங்கள் திரட்டி வருவதாக கான்பூர் காவல்துறை துணை ஆய்வாளர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளதாகவும் தி வயர் குறிப்பிட்டுள்ளது.

பிரீத்திந்தர் சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு அளித்துள்ள பேட்டியில், ”கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டில் சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.

“அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் குழு ஆகியவை சம்பவ இடத்திற்குச் சென்றதில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்குல் மற்றும் பீரன், சிப்ஸ் தருவதாக் கூறி சிறுமியைக் கடத்தியதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “சிறுமியை வன்கொடுமை செய்வதற்காக அவளுடைய கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். சிறுமியின் செருப்பும், உடையும் அருகில் இருந்த மரத்தருகே கிடந்தன.” என்று பிரீத்திந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையை யொட்டி இதுபோன்ற பல மூடநம்பிக்கைகள் நடந்தேறுவதாகவும், மனித உயிர்களை மட்டும் இல்லாமல், சில வகை ஆந்தைகளையும் இதில் ஈடுபடுத்துவதாகவும் தி வயர் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்