Aran Sei

நொடிக்கு நொடி முடிவை மாற்றுபவர் ட்ரம்ப்: ஜோ பிடன் குற்றச்சாட்டு

Credits: Business standards

திபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாத நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என டொனால்டு ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள்.

அதிபர் வேட்பாளர்களிடையேயான விவாதத்தின் முதல் கட்டம் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற்ற நிலையில், அக்டோபர் 1-ம் தேதி ட்ரம்ப் மற்றும் மனைவி மெலினா ட்ரம்ப்-க்குக்க் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

நான்கு தினங்கள் மேரிலாண்ட் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பிறகு கடந்த திங்கட்கிழமை ஹெலிகாப்டர் மூலம் ட்ரம்ப் வெள்ளை மாளிகை வந்தடைந்தார்.

டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடன் இடையிலான இரண்டாம் கட்ட விவாதம் அக்டோபர் 15-ம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ட்ரம்ப்-க்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விவாதத்தைக் காணொலி மூலம் நடத்துவதாக விவாத ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது

”ஆன்லைன் விவாதத்துக்காகக் கணினிக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு என் நேரத்தை வீணடிக்க முடியாது. இது முட்டாள்தனமானது.” என்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

 

ட்ரம்ப் அணியினர் இந்த விவாதத்தை நேரடி விவாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தாலும், “காணொலி வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது விவாதத்தை நேரடி விவாதமாக மாற்றும் எண்ணம் இல்லை” என்று விவாதக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து ஜோ பிடன், “அதிபர் ட்ரம்ப் நொடிக்கு நொடி முடிவுகளை மாற்றுகிறார்” என்றும், அவரது அணியினர், “வாக்காளர்களின் கேள்வியை எதிர்கொள்ள ட்ரம்ப் விரும்பவில்லை.” எனவும் குற்றம் சாட்டியுள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 22-ம் தேதி மற்றும் 29-ம் தேதியில் நடக்க இருக்கும் அதிபர் வேட்பாளர் விவாதங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், ஜனநாய கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 22-ம் தேதி பிலடெல்பியாவில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்