Aran Sei

’குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார் யோகி ஆதித்யநாத்’: பிரியங்கா காந்தி சாடல்

Credits National Herald

த்தர பிரதேச மாநிலத்தில் தொடரும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மாநில முதலமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியைக் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தூக்கிட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக வட்ட அதிகாரி ரஜ்னிஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கோண்டா என்ற மாவட்டத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று சிறுமிகள் மீது ஆசிட் வீசிய சம்பவமும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் விரைவு நீதிமன்றத்திலும், குழந்தைகள் மீதான வன்முறைகள் போக்ஸோ நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

”சம்பவங்கள் தொடர்பாக விரைந்து செயல்படும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நேரத்தில் விசாரணையை முடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் விரைவாக தண்டனை வழங்கப்படும் வகையில் வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிட் வீச்சு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, “பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை, அரசியல் லாபத்துக்காக உத்தர பிரதேச அரசு நியாயப்படுத்தியும் பாதுகாத்தும் வருவது, மாநிலம் முழுவதும் குற்றவாளிகளை மேலும் தைரியப்படுத்தியுள்ளது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, செப்டம்பர் 14ம் தேதி மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் இறந்த உடலை உத்தரப்பிரதேசக் காவலர்கள் நடு இரவில் பெற்றோர் அனுமதி இன்றி எரியூட்டினார்கள் என அலகாபாத் நீதிமன்றத்தில் குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்துள்ளதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இறந்த பெண்ணின் உடலை நடு இரவில் எரித்தது மனித உரிமை மீறல் என உத்தர பிரதேச அரசை உயர்நீதி மன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்