Aran Sei

உ.பி., அரசுக்கு பயந்து டெல்லியில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடி – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

த்தர பிரதேசத்தில் இருக்கும் கலாச்சார காவலர்களுக்கு (Vigilante group) அஞ்சி அம்மாநிலத்தை விட்டு வெளியேறிய காதல் ஜோடிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் காதலித்து வந்த 25 வயது இஸ்லாமிய ஆணும் 21 வயது இந்து பெண்ணும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கடும் எதிப்பு தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து, அவர்கள் கூறம் நபரை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அந்த ஜோடி, தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, டெல்லியில் இருக்கும் ”தனக் ஃபார் ஹியுமானிட்டி” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் சட்ட ஆலோசனைக்காகவும் பாதுகாப்பான அடைக்கலம் கோரியும் அணுகியுள்ளனர்.

அவர்கள் சார்பாக, வழக்கறிஞர்கள் சவ்திக் பானர்ஜி மற்றும் ஆகார்ஷ் கம்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், பாதுகாப்பாக தங்குவதற்கான இடம் கோரியும் டெல்லியின் சமூக நலத்துறையை நாடியிருக்கின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பபட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உத்தர பிரதேசத்தில் மதமாற்று திருமணம் செய்பவர்களுக்கு எதிரான சமூக விரோத போக்கு நிலவுவதாகவும், அவ்வாறு திருமணம் செய்பவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியேறியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மதம்மாறி திருமணம் செய்தவர்கள் கலாச்சார காவலர்களாலும் அதிகாரிகளாலும் சந்திக்கும் அச்சுறுத்தல்களும் அராஜகங்களும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர்கள் வயது வந்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

காதல் ஜோடிக்காக ஆஜரான வழக்கறிஞர் விரிந்தா குரோவர், படித்த பட்டதாரிகளான மனுதாரர்கள், சிறப்பு திருமணச் சட்டம் 1954-ன் கீழ் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் அவர்களுடைய திருமணத்தை எதிர்ப்பதாகவும் அவர்கள் பெற்றோர் விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி, அழுத்தம் கொடுத்து வருவதாகவும் வாதாடியுள்ளார்.

மனுதாரர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும், கலாச்சார காவலர்கள் மற்றும் அவர்களின் கீழ் செயல்படும் நபர்களால் அச்சுறுத்தல் இருப்பதாக விரிந்தா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ரா, டெல்லி அரசு மற்றும் காவல்துறை காதல் ஜோடிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தங்குவதற்கு அரசு, பாதுகாப்பான இடத்தை உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்