Aran Sei

உத்தர பிரதேச அரசு ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி சார்பில் நாளை மாலை பேரணி நடத்தவிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண்ணின் உடலை இறுதிச் சடங்குக்காக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்காமல், காவல் துறையினரே நள்ளிரவில் தகனம் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைப் பார்ப்பதற்காகச் சென்ற ராகுல் காந்தியையும், பிரியங்கா வத்ராவையும் காவலர்கள் தடுத்ததும், ராகுல் காந்தியை கீழே தள்ளி விட்டது பெரும் கண்டனத்துக்கு ஆளானது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் குரல் எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா வத்ரா வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாளை மாலை 05.30 மணியளவில் திமுக மகளிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் கைகளில் ஒளியேந்தி பேரணி நடத்தவிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹத்ராஸ் பெண்ணின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய உ.பி பாஜக அரசு எதிர்மறையாக செயல்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்ப்பதற்காக வந்த ராகுல் மற்றும் பிரியங்கா மீதான கைது நடவடிக்கை ஜனநாயகத்துக்கே இழுக்கு என்றும் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதோடு, ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், இதனைச் செய்ய மத்திய அரசு, உ.பி. அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணி என்றும் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்