Aran Sei

தொழிலாளர் தரவு தளம்: மத்திய அரசு உருவாக்குமா?

credit: english.samajalive.in

மைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பாக நாடு தழுவிய தரவு தளத்தை உருவாக்கவிருப்பதாக மாநிலங்கள் அவையில் நேற்று (செப்டம்பர் 16) தொழிலாளர் அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் குறிப்பாக கொரோனா காலத்தில்  சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற வழியில் மரணித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகிய கேள்விகள் எழுப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சென்ற திங்கள் அன்று தொழிலாளர் அமைச்சகம், புலம்பெயர்ந்த தொழிலாளர் பற்றிய தரவுகள் தன்னிடம் இல்லை என்று மக்களவையில் குறிப்பிட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய தரவு தளம் ஒன்று கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலரால் நடத்தப்படுகிறது. அந்த திறந்தநிலை தரவு தளம், 900-க்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொது முடக்கம் காரணமாக தங்கள் ஊர்களுக்கு செல்லும் வழியில் பல்வேறு காரணங்களினால் மரணித்துள்ளனர் என்று கூறுகிறது.

வல்லுநர்கள் சிலரால் நடத்தப்படுகின்ற தரவு தளத்தாலேயே குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி விவரங்களை தர முடிகிற பட்சத்தில் தொழிலாளர் அமைச்சகத்தால் ஏன் தரவு தளத்தை உருவாக்க முடியாது என்று தொழிலாளர் அமைச்சகம் மீது நாடாளுமன்றத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கிய அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நாடு தழுவிய தரவு தளத்தை உருவாக்கவிருப்பதாக மாநிலங்கள் அவையில் உறுதியளித்துள்ளது. இந்த தரவு தளத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்களின் பெயர், செய்யும் வேலை, பாலினம் போன்ற தகவல்களுடன் ஆதார் எண்ணும் இணைக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இத்தரவு தளத்திட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் இதர உதவிகளை பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள, மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்த தொழிலாளர் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் பணிச் சூழல்) சட்டம் 1979-ஐ ஒரே தொழிலாளர் சட்டத்தொகுப்புக்குள் கொண்டு வருவதை நோக்கி பணிகள் நடைபெற்று வருவதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

credit: inventiva.co.in
credit: inventiva.co.in

கொரோனா காலத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்புகள் பற்றிய கேள்விக்கு, “உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தப் பொது முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது இந்தியா உட்பட உலகப் பொருளாதாரங்களை பாதித்துள்ளது. கொரோனா தொற்று பெரும் எண்ணிக்கையில் குடிப்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லக் காரணமாக அமைந்தது” என்று தொழிலாளர் அமைச்சகம் பதில் அளித்தது.

தொழிலாளர் அமைச்சகம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றி தரவு தளத்தை உருவாக்கவிருக்கும் முடிவை குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான கீதாவுடன் பேசும்போது, “எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை  தொழிலாளர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதே ஆகும்.  பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் யாருமே இருக்கக் கூடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில்  34 தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. பலவிதமான தொழில்களுக்கு தனித்தனியான நல வாரியங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதுதான் சரியானது” என்று தெரிவித்தார்.

தொழிலாளர் துறை கொண்டு வரும் தொழிலாளர் தொகுப்பு சட்டம் பற்றி கூறுகையில், ”ஏற்கெனவே இருக்கிற சட்டங்களில் உள்ள தொழிலாளர் நல அம்சங்கள் கூட இந்த தொகுப்பு சட்டத்தில் இல்லை” என்று அவர் கூறினார்.

மத்திய அரசினால் நாடு தழுவிய தரவு தளத்தை உருவாக்க முடியுமா? என்ற கேள்விக்கு, ”மத்திய அரசினால் தரவு தளத்தை உருவாக்க முடியாது. மாநில அரசுகள் தரவு தளத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்