Aran Sei

ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார் – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

Image Credits: Yahoo News

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். சமீபத்தில் இதய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த அவர் மரணமடைந்துள்ளார்.

74 வயதான அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், “திடீரெனத் தோன்றிய சூழ்நிலை காரணமாக” அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்று அவரது மகனும் லோக் ஜான்ஷக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

இன்று மாலை, சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது தந்தையின் இறப்புச் செய்தியை வெளியிட்டார்.

அதில் “பாப்பா (அப்பா) … இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை. ஆனால், நீங்கள் எங்கிருந்தாலும் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன். மிஸ் யூ பாப்பா,” என்று கூறி, அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு பழைய புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவுகள் நிரம்பி வழிந்தன. அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் போன்ற பலரும் மத்திய அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலில் ட்வீட் செய்தவர்களில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அடங்குவர்.

“நாடு ஒரு தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவரை இழந்துள்ளது. பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். அவர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்தார், மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை வென்றார்” என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி “நான் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு வருத்தத்தில் உள்ளேன். நம் தேசத்தில் ஒருபோதும் நிரப்பமுடியாத அளவிற்கான ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது. ராம் விலாஸ் பாஸ்வான் ஜியின் மறைவு எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு. நான் ஒரு நண்பரை, மதிப்புமிக்க சக ஊழியரை மற்றும் ஒவ்வொரு ஏழையும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நபரை இழந்துவிட்டேன்” என்று பதிவிட்டு அவரது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் பெரும் ஆளுமையாக அறியப்பட்ட ராம் விலாஸ் பாஸ்வான் 1989 முதல் அமைக்கப்பட்ட ஏறக்குறைய அனைத்து மத்திய அரசாங்கங்களிலும் அமைச்சராக இருந்துள்ளார். வி.பி.சிங்கின் அமைச்சரவையில் தொடங்கி பின்னர் ஆறு பிரதமர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

2004 தேர்தல்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பாஸ்வான் இணைந்தார்.

2002 குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி பாஜக கட்சியுடன் உறவுகளை அவர் முறித்துக்கொண்டாலும், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மீண்டும் பாஜகவுடன் இணைந்தார்.

2014-ம் ஆண்டில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டபோது, மீண்டும் பாஜக கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜன சக்தி இணைந்தது.

பீகாரின் சக்திவாய்ந்த தலித் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான், 70 களில் ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வளர்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் ஆகிய இளம் தலைவர்களில் அவரும் ஒருவராவார்.

1975 அவசரகாலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 1977 நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் உள்ள ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

கடந்த ஆண்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ராம் விலாஸ் பாஸ்வான், தனது ஹாஜிபூர் ஆசனத்தைத் தனது தம்பி மற்றும் பீகார் அமைச்சர் பசுபதி குமார் பராஸுக்கு வீட்டுக் கொடுத்தார். பின்னர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

“ராம் விலாஸ் பாஸ்வானின் அகால மரணம் குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. ஏழை-நலிந்தவர்கள் இன்று ஒரு வலுவான அரசியல் குரலை இழந்தனர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

“மத்திய அமைச்சரும் பிரபல அரசியல்வாதியுமான ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் மரணத்தால் நான் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுகிறேன். அவரது மரணம் இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துவரும் வேளையில், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்குப் பீஹார் மாநிலம் பாட்னாவில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ செய்தி வெளியாகியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்