Aran Sei

” பொதுக் கருத்தை மாற்ற நாடகமாடுகிறது அரசு ” – போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்

டெல்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் - Image Credit : thehindu.com

ரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் போக்கு காட்டுவதிலேயே கவனமாக உள்ளது என்று கூறி, ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க் கிழமை நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தன்று மாலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா 13 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலும் விவசாய சங்க பிரதிநிதிகள் மூன்று கருப்புச் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும், மின்சார மசோதா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

நேற்று, ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு 20 பக்கங்களிலான தனது சமரச திட்டத்தை அனுப்பி வைத்தது. இந்தத் திட்டம் விவசாய மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில், குறைந்த பட்ச ஆதரவு விலை தொடர்பாக எழுத்து பூர்வமாக உறுதி வழங்க தயாராக இருப்பதாகவும், விவசாய விளைபொருட்கள் கொள்முதல் மையங்களின் மண்டிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கிடையே சமதையை உறுதி செய்வதாகவும், விளைபொருள் விற்பனை தொடர்பான சச்சரவுகளை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

விவசாயிகளால் எதிர்க்கப்படும் மின்சார திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெறுவதாகவும் அரசு கூறியிருந்தது. மண்டிகளுக்கு வெளியே செயல்படும் வணிகர்களை பதிவு செய்து அவர்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகள் அனுமதிக்கப்படும் என்றும் சமரச திட்டத்தில் அரசு கூறியிருந்தது.

இந்த மாற்றங்கள் தொடர்பாக இரண்டு விவசாய சட்டங்களில் திருத்தப்பட வேண்டியிருக்கும் என்று அரசு கூறியிருந்தது. ஆனால், மூன்றாவது சட்டமான அத்தியாவசிய பொருட்கள் சட்டம் குறித்து இந்த சமரசத் திட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை.

அகில இந்திய கிசான் சபா தலைவர் அசோக் தாவாலே அரசின் சமரச திட்டம் விவசாயிகளை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. “இந்த சமரச திட்டம் அனைத்து இந்திய குடிமக்களையும் இழிவுபடுத்துவது” என்று விவசாயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

“அரசு நடத்தும் மண்டிகளுக்கு வெளியில் வர்த்தகர்கள் மீதும் கம்பெனிகள் மீதும் ஒழுங்குமுறைகளை நீக்குவது என்ற மையமான பிரச்சனையை இந்த சமரச திட்டம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. அத்தகைய ஒழுங்குமுறை நீக்கம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் எல்லா பாதுகாப்புகளையும் நீக்கி விடும்” என்று தெலுங்கானா விவசாயிகள் குழு ரயத்து ஸ்வராஜ்யா வேதிகாவின் தலைவர் கிரண் குமார் விஸ்சா கூறியுள்ளார்.

ஒப்பந்த விவசாய சட்டங்களில் செய்யப் போவதாக சொல்லப்படும் திருத்தங்கள், ஒப்பந்தங்களை பதிவு செய்யாத, அல்லது மோசமான விதைகளை வழங்கும் அல்லது விவசாயிகள் மீது வழக்கு தொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்கப் போவதில்லை. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தொடம்பான விவசாயிகளின் கோரிக்கைகளும் கவனிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

“தான் நியாயமாக நடந்து கொள்வதாக அரசு காட்டிக் கொள்ள முயற்சித்தாலும், முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற அது பிடிவாதமாக மறுக்கிறது. பொது மக்களின் கருத்தை மாற்றுவதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் சமரசத் திட்டம் தெளிவற்றதாகவும், குழப்புவதாகவும் உள்ளது, விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்று கூறி விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அதை நிராகரித்துள்ளது.

தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக பின்வருவனவற்றை சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

  1. டெல்லிக்குச் செல்லும் சாலைகளை ஒவ்வொன்றாக மறிப்பது. ஜெய்ப்பூர் – டெல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து டிசம்பர் 12-க்கு முன்பு தடுத்து நிறுத்தப்படும்.
  2. டிசம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
  3. டிசம்பர் 12-ம் தேதி நாடு முழுவதிலும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தடுப்பது
  4. ஜியோ உட்பட ரிலையன்ஸ் மற்றும் அதானி குழும பொருட்களை புறக்கணிப்பது, அந்நிறுவனங்கள் நடத்தும் ஷாப்பிங் மால்களை புறக்கணிப்பது
  5. பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் வீடுகளையும் அவர்களது அலுவலகங்களையும் டிசம்பர் 14-ம் தேதி முற்றுகையிடுவது

இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, திமுக தலைவர் டி கே எஸ் இளங்கோவன் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து, இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வேளாண் மசோதாக்கள் எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதங்களும் நடத்தப்படாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

அரசு, தான் விட்டுக் கொடுத்து விட்டதாக சொல்லும் அதே நேரம் விவசாயிகள் தமது முதன்மையான கோரிக்கை சட்டங்களை ரத்து செய்வது என்று வலியுறுத்துகின்றனர் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆறு சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியில் தெருப் போராட்டங்களைத் தொடர்ந்து விவசாய சங்கத் தலைவர்கள் தமது ஆரம்ப கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

மாநிலங்களவையில் செப்டம்பர் 20-ம் தேதி சச்சரவுக்குரிய முறையில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்டோபர் 13-ம் தேதி போராடும் விவசாயிகள் வெளியிட்ட கோரிக்கை அறிக்கையில் முதல் கோரிக்கை, இந்த மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது.

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பிரிக்க முடியாதவை என்று கூறும் விவசாயிகள், அரசு வேண்டுமென்றே இழுத்தடிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அக்டோபர் 14-ம் தேதி 29 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஒன்றிய விவசாயத் துறைச் செயலர் சஞ்சய் அகர்வாலுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் விவசாயிகள் பின்வரும் கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

  1. விவசாய சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐயும் ரத்து செய்வது.
  2. குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்வதை சட்டரீதியாக உறுதி செய்வது.
  3. மின்சார (திருத்த) மசோதா 2020-ஐ திரும்பப் பெறுவது
  4. செயல்பாட்டளர்கள் மீதும் போராட்டக் காரர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது
  5. குறைந்த பட்ச ஆதரவு விலையை C+50 சதவீதம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்ற சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது

டிசம்பர் 5-ம் தேதி 5-வது கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விவசாய சங்க பிரதிநிதிகள் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்தனர்.

“சட்டங்களை ரத்து செய்ய வைப்பது என்ற முழக்கத்துடன் மக்களை அணி திரட்டியிருக்கிறோம். மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட்டு, இரண்டு மசோதாக்கள் திரும்பப் பெறப்படுவது வரை திரும்ப மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்” என்று விவசாய சங்கத் தலைவர் சாந்து இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றையும் அதில் சட்டங்களை ரத்து செய்ய வைப்பது மையமாக கோரிக்கையாக இருந்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கியுள்ளது

ஜூலை 27-ம் தேதி அன்று 11 விவசாய சங்கங்கள் தமது கிராமங்களில் இருந்து டிராக்டர்களில் சென்று விவசாய அவசர சட்டங்களை ரத்து செய்யுமாறு தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு கொடுத்திருந்தனர்.

ஆகஸ்ட் 31-ம் தேதியன்று விவசாய தொழிலாளர் சங்கங்கள் உட்பட பஞ்சாபின் அனைத்து 31 விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக முடிவெடுத்த பிறகு போராட்டம் வலுவடைந்தது. அவர்கள் பிரதமருக்கும் பஞ்சாப் மாநில அரசுக்கும் அனுப்பிய கோரிக்கை மனுவும் மூன்று அவசர சட்டங்களை ரத்து செய்வதையும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதையும் மையமாகக் கொண்டிருந்தது.

மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு 31 விவசாயிகள் சங்கங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர். கூடவே, கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமான மால்கள், ரிலையன்ஸ் பெட்ரோல் பம்புகள், மற்றும் பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு வெளியேயும் மறியல் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டங்களின் போதும் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. விவசாயிகள் போராட்டம் டெல்லியை அடைந்த பிறகு இந்தக் கோரிக்கை மேலும் உறுதியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடதுசாரி தலைவர்கள் இருப்பதால்தான் விவசாயிகளின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது என்று அரசு கருதுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. 35 பிரதிநிதிகளிலிருந்து இடதுசாரி பிரதிநிதிகளை தனியாக ஒதுக்கி விடலாம் என்று அரசு நம்பும் அதே வேளையில் அனைத்து சங்கங்களும் ஒரு மனதாக அரசின் சமரச திட்டத்தை நிராகரித்து, மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்