Aran Sei

புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?

credit: business-standard.com

கொரோனா காலத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தரவுகள் மத்திய அரசிடம் உள்ளன என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணம் உறுதி செய்துள்ளது.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது முடக்கம் காரணமாக இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரச்சினை பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மோடி அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

பொது முடக்க காலத்தில் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும்படி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. அதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சர் சந்தோஷ் காங்வார் பதிலளிக்கையில், புலம்பெயர்ந்த தொழிலாளர் பற்றிய தரவுகள் அரசினால் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

காங்வாரின் கூற்றுக்கு மாறாக, இறந்து போன புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை அரசு பதிவு செய்திருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக ‘தி வையர்’ இணையதளம் பெற்ற ஆவணம் வெளிப்படுத்துகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் பயணித்தபோது இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு தனித்தனியாக மனுக்கள் அளிக்கப்பட்டன. அதற்கு, 14 இரயில்வே மண்டலங்கள் மட்டுமே பதிலளித்தன. இன்னும் 4 மண்டலங்களிலிருந்து பதில் வரவில்லை.

அதன்படி, மொத்தம் 80 நபர்கள் தொழிலாளர் சிறப்பு ரயில் பயணங்களில் இறந்ததுள்ளது தெரிய வருகிறது. பதிலளிக்காத ரயில்வே மண்டலங்கள் தங்கள் வசம் உள்ள தரவுகளை கொடுக்கும் பட்சத்தில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ‘தி வையர்’ இணையதளம் தெரிவிக்கிறது.

தொழிலாளர் சிறப்பு ரயில்களில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்கான பொறுப்பு இரயில்வே பாதுகாப்பு படையின் வசமுள்ளது. இறந்தவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இரயில்வே பாதுகாப்பு படை வழங்கிய தகவல் தெரிவிக்கிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தரவு இல்லை என்று மத்திய அரசு கூறுவதைப் பற்றி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கீதாவுடன் பேசிய போது, ”மத்திய அரசால் தரவுகளை திரட்ட முடியும். ஆனால், அவர்கள் அதை தொந்தரவாகதான் கருதுகிறார்கள்” என கூறுகிறார்.

”புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை பற்றி உச்சநீதி மன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கில் கூட மத்திய அரசு ’தரவுகள் இல்லை’ என்றுதான் மனு தாக்கல் செய்தது” என்கிறார் கீதா.

”மாநில அரசுகள் அடுத்த 48 மணி நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை தர வேண்டும் என்ற ஒரே உத்தரவின் மூலம் மத்திய அரசினால் தகவல்களை திரட்ட முடியும். அவ்வாறு தகவல்களை திரட்டாதது மத்திய அரசுக்கு புலம்பெயர் தொழிலாளர் பற்றிய அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது” என கீதா கூறுகிறார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்