Aran Sei

ஐநா மனித உரிமைகள் குழுவில் காஷ்மீர் பிரச்சினை – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ந்தியாவுக்கு எதிரான “அடிப்படையற்ற, விஷமத்தனமான பிரச்சாரங்களை” நடத்துவதற்கு பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை இந்தியா கடுமையாக கண்டித்திருக்கிறது.

நேற்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் 46-வது கூட்டத்தின் உயர்மட்ட பிரிவில் பேசிய, ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் சீமா புஜானி, காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான், துருக்கி, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றை கண்டித்துள்ளதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவின் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்னர் பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு விவகாரங்களை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சீமா புஜானி பேசியுள்ளார்.

ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமைகள் நிலை பற்றிய விவகாரத்தில், இந்தியாவின் “உள்நாட்டு விவகாரங்களில்” துருக்கியின் கருத்துக்கள் “முற்றிலும் ஏற்க முடியாதவை” என்று இந்தியா தெரிவித்துள்ளது.

“ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களைப் பொறுத்தவரை, துருக்கி தன் நாடு தொடர்பான தீர்மானங்களை முதலில் நிறைவேற்ற வேண்டும்” என்று இந்தியாவின் செயலாளர் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு காஷ்மீர் மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும் என்று 1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் எண் 47 கூறுவது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினையை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இந்தியாவும் பாகிஸ்தானும் முடிவு செய்திருக்கின்றன.

வீட்டு சிறையில் காஷ்மீர் தலைவர்கள்: ‘இதுதான் உங்கள் புதிய மாடல் ஜனநாயகம்’ – உமர் அப்துல்லா விமர்சனம்

2019-ம் ஆண்டு மார்ச் மாதம், மோடி அரசு, ஜம்மு&காஷ்மீரின் அரசியல் சட்ட சிறப்பு உரிமைகளை ரத்து செய்து, அதன் மாநில அந்தஸ்தை மாற்றி, மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருந்தது. இதை ஒட்டி காஷ்மீரில் இணைய இணைப்பு தடை செய்யப்பட்டு, கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான், துருக்கி, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவை கண்டித்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் பாகிஸ்தான் பிரதிநிதியின் உரைக்கு பதிலளிக்கும் உரிமையின் கீழ் இந்திய பிரதிநிதி இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மீது இந்திய அரசின் அடக்குமுறை: ஐ.நா சபைக்கு எடுத்துச் செல்ல அமெரிக்க அதிபரை வலியுறுத்தும் இந்திய வம்சாவளியினர்

ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவோட ஒன்றிணைந்த பிரிக்க முடியாத பகுதிகள் என்று சீமா புஜானி உறுதிபட கூறியுள்ளார்.

பாகிஸ்தான் உலகத்திலேயே மிக மோசமான மனித உரிமைகள் நிலையில் உள்ளது என்றும், அங்கு சிறுபான்மை மதத்தவர்கள் நிறுவன ரீதியாக பாகுபாடு காட்டப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலும் பிற பகுதிகளிலும் அடக்குமுறைகளையும் கட்டாய ஆள் காணாமல் போவதையும், தன்னிச்சையான கைதுகளையும், சித்திரவதைகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை

பாகிஸ்தானில் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருவதை குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் அரசு ஆதரவிலான பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி இந்தப் பகுதியில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.

“பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு ஆதரவிலான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறும், பயங்கரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டுமாறும் மனித உரிமை குழு கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்