Aran Sei

எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது? – உமர் காலித்

Image Credits: Scroll

திகார் சிறை அதிகாரிகளால் பல நாட்களாகத் தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முன்னாள் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித், தன்னை தண்டிப்பது ஏன் என்று டெல்லி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

“எனக்குப் பாதுகாப்பு தேவை, ஆனால் பாதுகாப்பு என்பது என்னால் வெளியேறவே முடியாத பாதுகாப்பு அல்ல. இது ஒரு தண்டனை போன்றது, எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது?” என்று அவர் விசாரணையின் போது நீதிமன்றத்தில் கேட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும், எப்போதுமே சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக, உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக  உமர் காலித் கூறினார் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பாக, உமர் காலீத் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட ஜேஎன்யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் மீது சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்று, கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத்துக்கு முன் காணொளி உரையாடுதளம் வழியாக ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் சிறை கண்காணிப்பாளரை வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு கூறியுள்ளது.

விசாரணை தொடங்கியபோது, ​​டெல்லி காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அமித் பிரசாத், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு 30 நாட்கள் நீதிமன்றக் காவலைக் கோரி ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். எவ்வாறாயினும், நீதிபதி அமிதாப் ராவத், அவரது உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும், வழக்கு கோப்புகளைப் பார்க்க முடியாததால், அவர்களின் நீதித்துறை காவலை நீட்டிப்பதற்கான கோரிக்கையை வழங்க முடியாது என்றும் அமித்திடம் தெரிவித்துள்ளதாக இச்செய்தி குறிப்பிடுகிறது.

டெல்லி நீதிமன்றம் செப்டம்பர் 24 அன்று உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது. தற்போது, நீதிமன்றம் இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை விசாரிக்கும் மற்றும் டெல்லி காவல்துறையின் மனுவின் உத்தரவை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மே மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியுடன் கலந்துகொண்ட முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவர் கன்ஹையா குமார், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்துப் போராடிய சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி காவல்துறை ஏன் கைது செய்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது, “சிஏஏவுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரசுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனும் செய்தியை அனுப்பும் நோக்கோடு இவை நடைபெறுகின்றன,” என்று அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்