‘சுதந்திரம் பறிக்கப்படுவதை’ தவிர சிறையில் வேறு எவ்வித்மான பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) முன்னாள் மாணவர் உமர் காலித் தெரிவித்துள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ செய்தி வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களுக்குத் திட்டம் தீட்டியதாக உமர் காலித் மற்றும் ஜேஎன்யூ பிஎச்டி மாணவர் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஷர்ஜீல் இமாமும், செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி, உமர் காலித்தும் கைது செய்யப்பட்டனர்
கடந்த மாதம், டெல்லி நீதிமன்றம் இவர்களின் நீதிமன்றக் காவலை நவம்பர் 20 வரை நீட்டித்தது. இது முடிவுக்கு வந்துள்ள நிலையில் இவர்களின் காவல் மீண்டும் நவம்பர் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
`உமர் காலித்துக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’ – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
நேற்று, டெல்லி கர்கர்டூமா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “சிறையில் பறிக்கப்படும் சுதந்திரம் மற்றும் இந்த வழக்கில் நடைபெறும் மோசமான விசாரணையைத் தவிர, எனக்கு வேறு எவ்விதமான சிக்கலும் இல்லை” என்று உமர் காலித் கூறியுள்ளார்.
அக்டோபர் 23 அன்று, எப்போதுமே சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக, உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உமர் காலித் கூறினார். இதை கேட்ட நீதிமன்றம், உமர் காலித்தைக் காவல் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
முன்னதாக, ஷர்ஜீல் இமாம் எழுதிய சில கட்டுரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தைக் குறித்தும் ஷர்ஜீல் இமாமின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசை அவதூறு செய்யும் நோக்கோடு இந்த வன்முறை நடந்ததாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது என ‘ஸ்க்ரோல்‘ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கர்கர்டூமா மாவட்ட நீதிமன்றம் இவர்களின் நீதிமன்ற காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.