Aran Sei

மீண்டும் உமர் காலித் கைது – விசாரணைக்கு உத்தரவு

ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தேசவிரோத தடுப்பு  சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், வடக்கு தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கில் உமர் காலித்தை மீண்டும் தில்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறை 700-க்கும் மேற்பட்ட  வழக்குகளை பதிவு செய்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது. தில்லி காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் பொதுச்செயலாளரான சீத்தாராம் யெச்சூரி, பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ், தில்லி பல்கலை கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் போன்றோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இதை தொடர்ந்து, தில்லி வன்முறை தொடர்பாக, ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தேசவிரோத தடுப்பு  சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைதிற்கு முன் தில்லி காவல் துறை அவரை 11 மணி நேரம் விசாரித்தனர். கைது செய்யப்பட்ட உமர் காலித் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 22-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் வடக்கு தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கில் உமர் காலித்தை மீண்டும் தில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக மூன்று நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி : tribuneindia.com

வடகிழக்கு தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் உள்ள பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது, வன்முறையை தூண்டியது, சதித்திட்டம் தீட்டியது உட்பட பல பிரிவுகளில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக முன்பே சமூக செயற்பாட்டாளர் காலித் சைஃபியும் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இர்ஷத் ஜஹனும் கைது செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் நீதிமன்ற காவலில் உள்ளார்கள். மேலும்  இவ்வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தாஹீர் ஹுசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தில்லி காவல் துறை கூறிவந்தது.

தில்லி வன்முறை தொடர்பான குற்றப்பத்திரிகையில் உமர் காலித்தின் பெயரும் பலமுறை சேர்க்கப்பட்டிருந்தது. உமர் காலித், தாஹிர் ஹுசேன் மற்றும் காலித் சைஃபி மூவரும் ஜனவரி 8-ம் தேதி சந்தித்து கொண்டதாகவும், அப்போது தில்லியில் கலவரம் செய்வதற்கான திட்டங்கள் தீட்டியதாகவும் குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்