Aran Sei

ஆளுநருக்கு மூளை இருந்தால் புரிந்து கொள்வார் : உத்தவ் தாக்கரே

மகாரஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே credits : the week

“நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதில் அக்கறை காட்டாமல் பாஜக ஆளாத பிற மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு செய்வதிலேயே பாஜக கவனம் செலுத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே என்ற இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 25-ம் தேதி ஆண்டுதோறும் சிவசேனாவால் நடத்தப்படும் தசரா பேரணியில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “தைரியம் இருந்தால் என்னுடைய ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து பாருங்கள் , முதலில் மத்திய அரசு தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்றும் கூறினார்.

சேனாவின் வருடாந்திர தசரா பேரணி வழக்கமான இடமான சிவாஜி பூங்காவில் நடைபெறவில்லை கொரோனா விதிமுறைகளின் காரணமாக தாதரில் உள்ள சாவர்க்கர் மண்டபத்தில் நடைபெற்றது,

“கடந்த காலங்களில் இருந்ததைப் போல வேறு ‘மாற்று இல்லை ’ என்ற காரணிகள் தற்போது இல்லை” என்றும், “உங்களைத் தவிர வேறு யார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தாலும் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்,” என்று தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.

“நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உழைக்காமல் பாஜக ஆளாத மாநிலங்களின் அரசாங்கங்களை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் ” என்று அவர் கூறினார். மேலும் சிவசேனாவுக்கு ஆட்சி அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்றும் கூறினார்.

கடந்த திங்கள் கிழமை அன்று மகராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய  மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதை உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் “ என்று கூறியிருந்தார்.

அதில் “நீங்கள் இந்துத்துவாவின் தீவிரமான பற்றாளர் .நீங்கள் முதல்வராக பொறுப்பேற்றவுடன் அயோத்தி சென்று ராமரை வழிப்பட்டு ராமரின் மீது கொண்டுள்ள பக்தியை வெளிப்படையாக காட்டிக் கொண்டவர் ஆனால் தொடந்து வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதைத் தள்ளிவைத்தே கொண்டு இருப்பதற்கு ஏதேனும் தெய்வீக முன் அறிவிப்பைப் பெற்றிருக்கிறீர்களா ? அல்லது இவ்வளவு காலம் நீங்கள் வெறுத்த சொல்லாடலான ”மதச்சாற்பற்றவர் ” ஆகிவிட்டீர்களா” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி பேசிய உத்தவ் தாக்கரே “நாடு ஒரு தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கூட எவ்வாறு ஒருவரால் அரசியல் செய்ய முடிகிறது? சிவசேனாவின் இந்துத்துவா நிலைப்பாடு கேள்வி கேட்கப்படுகிறது. மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும் மும்பை காவல் துறைக்கும் எதிராக அவதூறு பரப்பப்படுகிறது“ என்று கூறினார்.

முந்தைய நாள் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்   “வெறும் பூஜை மற்றும் சடங்குகளை கடைபிடிப்பது மட்டுமே இந்துத்துவா என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் “ என்று பேசியதை மேற்கொள் காட்டி பேசிய தாக்கரே “ இதை சில கருப்பு தொப்பி அணிந்திருக்கும் நபர்கள் மூளை இருந்தால் புரிந்து கொள்ள வேண்டும் “ என்று உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவ நிலைப்பாடு குறித்து விமர்சித்து மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கக் வலியுறுத்திக் கொண்டிருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை குறிப்பிட்டு பேசினார்.

மேலும் “வழிபாட்டு இடங்களை மூடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வை கொண்டுவருவது எச்சரிக்கையாகவும் படிப்படியாகவும் செய்யப்படுகிறது, ”என்றும் கூறியிருந்தார்.

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒரு முறை “சங் முக்த் பாரதத்திற்கு”   (ஆர்எஸ்எஸ் இல்லாத பாரதம்) அழைப்பு விடுத்ததாகவும், 2014-ல் பாஜக பிரதமர் வேட்பாளராக ஒரு மதச்சார்பற்ற முகத்தை நாடியதாகவும் தாக்கரே கூறினார்.

இப்போது “நிதீஷ் இந்துத்துவ ஆடைகளை அணிந்திருக்கிறாரா அல்லது பாஜகவினர் இப்போது மதச்சார்பற்றவராக மாறிவிட்டார்களா” என்றும் தாக்கரே கேள்வியெழுப்பினார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் (pok) ஒப்பிட்டு பேசிய கங்கனா ரனாவத் குறித்து பேசிய அவர் “ தங்கள் சொந்த ஊரில்  வாழ்வாதாரம் இல்லாமல் மும்பைக்கு வந்து பிழைப்பவர்கள் இறுதியில் மும்பைக்கு துரோகம் இழைக்கிறார்கள். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (pok)  என்று அழைத்தது உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வி தான் , ஏனேனில் அவர் தான் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (pok) மீட்பதாக கூறியிருந்தார்” என்றும் தாக்கரே கூறினார்.

மகாராஷ்ட்ராவை விரும்பாதவர்கள் மாநிலத்தை அவதூறு செய்வதற்காக எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிடவில்லை என்று அவர் கூறினார்.

“பீகாரின் மகனின் நீதிக்காக அழுகிறவர்கள் மகாராஷ்டிராவின் மகனின்  மாண்பை படுகொலை செய்கிறார்கள்” என்று சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தனது மகன் ஆதித்யா தாக்கரே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

மேலும், “தற்போதைய ஜிஎஸ்டி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும், “இந்த முறையினால் மாநிலங்கள் பயனடையாததால் இதை மாற்றியமைக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்