Aran Sei

இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தலையீடு – இந்திய வெளியுறவுத் துறை மௌனம்

image credit : indianexpress.com

சென்ற மாதம், இந்தியா பாகிஸ்தான் நாட்டு எல்லை தளபதிகளும் எல்லையில் போர்நிறுத்த அறிவிப்பை அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு, ஒரு மூன்றாம் தரப்பு நாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திய மற்றும் பாகிஸ்தானி அதிகாரிகளிடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவு என்று பல செய்தி அறிக்கைகள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கருத்து சொல்ல மறுத்து விட்டதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, சர்வதேச செய்தி நிறுவனமான புளூம்பெர்க், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏற்பாட்டில் இந்திய, பாகிஸ்தானிய அரசுகள், நான்கு-கட்ட “அமைதிக்கான பாதை” தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டது.

பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் போர்நிறுத்த மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவது என்று ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கை, பல மாதங்களுக்கு முன்பிருந்தே, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலையீட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவு என்று புளூம்பெர்க் அறிக்கை கூறியிருக்கிறது.

பிப்ரவரி 26-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையத் டெல்லிக்கு வந்த போது, இந்தியா-பாகிஸ்தான் “அமைதி” குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் விவாதித்ததாகவும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

image credit : thehindu.com
அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையத் – image credit : thehindu.com

முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நாளிதழ்களும், ஒரு சர்வதேச செய்தித் தளமும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் பாஜ்வா உள்ளிட்டவர்கள் தலைமையில், இந்த அதிகாரபூர்வமற்ற அமைதி ஏற்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தன என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

“இந்த நிகழ்முறையின் அடுத்த கட்டமாக, இரண்டு நாடுகளும் தத்தமது தலைநகரங்களில் தூதர்களை மீண்டும் நியமிப்பது நடைபெறும். 2019-ல் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி உரிமைகளை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தூதர்கள் திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர்.” என்று புளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது.

“வர்த்தக உறவுகளை மறுபடியும் புதுப்பிப்பது தொடர்பாகவும், காஷ்மீர் தொடர்பான நீடித்த தீர்வை காண்பதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதுதான் கடினமான பகுதி” என்று புளூம்பெர்க் கூறியுள்ளது. “இந்தியாவும் பாகிஸ்தானும் 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மூன்று போர்களுக்கு காஷ்மீர் காரணமாக இருந்திருக்கிறது” என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

ஒரு பரந்துபட்ட அமைதி நிகழ்முறைக்கான அறிகுறிகள் கடந்த சில மாதங்களாக தெரிகின்றன என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

  • முதலாவதாக, சென்றவாரத்தில் வெளியான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி பாஜ்வா, வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்கலா ஆகியோரின் அறிக்கைகள் வழக்கமான சவடால்கள் இல்லாமல் இருந்தன.
  • பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டதும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
  • இந்தியா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானிய விளையாட்டு அணிகளை அனுமதித்துள்ளது.
  • அடுத்த வாரம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷியும் துஷான்பேயில் நடைபெறவுள்ள “ஆசியாவின் இதயம்” கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர். இது இரு தரப்புக்கும் இடையேயான உரையாடலுக்கான ஒரு வாய்ப்பு என்று கருதப்படுகிறது.
  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் – பிராந்திர பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் பயங்கவாத-எதிர்ப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கையில் இந்திய படைகளும் பங்கேற்கும் என்று அதன் செயலகம் அறிவித்துள்ளது. இது முதல்முறையாகும் என்று தி ஹிந்து கூறுகிறது.
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான, நிரந்தர சிந்து ஆணையத்தின் வருடாந்திர கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கவுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையர் மெஹர் அலி ஷாவின் தலைமையில் 8 பேர் கொண்ட குழு இந்தியா வந்துள்ளது. இந்திய தரப்பிற்கு இந்திய ஆணையர் பிரதீப் சக்சேனா தலைமை வகிப்பார்.
    இந்த சந்திப்பு 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடக்கவுள்ளது என்று தி ஹிந்து கூறுகிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது என்று புளூம்பெர்க் கூறியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து வெளிப்படையாக நிராகரித்து வந்துள்ளது என்று தி ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பலர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவதாக முன் வந்திருக்கின்றனர். ஆனால் அவற்றை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்