Aran Sei

இந்திய போர்க்கப்பல்: பெண் அதிகாரிகள் முதன்முறையாக நியமனம்

Image Credits: New Indian Express

முதல் முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலில்  பணி புரிய நியமிக்கப்பட்டுள்ளார்கள். கடற்படையின் ஹெலிகாப்டரில் பார்வையாளராக (வான்வழி தொழில்நுட்ப வல்லுநர்) இவர்கள் தேர்வாகியுள்ளார்கள். கப்பலின் பயணம் துவங்கும்போது இவர்கள் கப்பலின் தளத்திலிருந்து பணியாற்றுவார்கள்.

இந்தியக் கடற்படையின் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் இதுவரை போர்க்கப்பல்களில் பெண்கள் நியமிக்கப்படவில்லை. கடற்படை துணை அதிகாரிகள்  குமுதினி தியாகி மற்றும் ரித்தி சிங் ஆகியோருக்கு தான் முதல் முறையாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர்கள், சோனார் கன்சோல்கள் மற்றும் புலனாய்வு சென்சார் (sonar consoles and Intelligence), கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு சென்சார் (Surveillance and Reconnaissance – ISR) போன்ற பல சென்சார்களை இயக்கும் பயிற்சியைப் பெற்று வருகிறார்கள்.

நியமிக்கபட்ட இரண்டு பெண் அதிகாரிகளும் கடற்படையின் புதிய எம்.எச் -60.ஆர் ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் ஏற்பட்டால், இந்தப் பெண் அதிகாரிகள் தாங்கள் இயங்கும் சென்சார்களைப் பயன்படுத்தி எதிரி நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது போர்க்கப்பல்களைக் கண்டறிந்து, ஏவுகணைகளை வீசும் விமானிகளுக்கு இலக்கைத் தீர்மானிக்க உதவுவார்கள்.

இன்று (21/09/2020),  ஐ.என்.எஸ் கருடாவில் நடந்த ஒரு நிகழ்வில், வான் வழி அச்சறுத்தல்களை மதிப்பிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பயிற்சியைப் பெற 17 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 4 பெண் அதிகாரிகள் அடங்குவர்.

இந்த நிகழ்ச்சியை நடத்தி விருதுகளை அளித்த ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் “பெண்கள் முதன்முறையாக ஹெலிகாப்டர் பயிற்சிகளில் ஈடுபடுவது மிக முக்கியமான நிகழ்வு, இது இறுதியில் இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் பெண்கள் பணி புரிவதற்கு வழி வகுக்கும்,” என்று கூறியுள்ளார்.

இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) ஒரு பெண் போர் விமானியைத் தனது ரஃபேல் போர் விமானத்தை இயக்க நியமித்தது. தற்போது இந்தியக் கடற்படையும் போர் ஹெலிகாப்டர்களை இயக்கப் பெண் அதிகாரிகளை நியமித்து உள்ளது.

2016-ம் ஆண்டில் பெண் போர் விமானிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. தற்போது, 10 போர் விமானிகள் உட்பட 1,875 பெண்கள் ராணுவ சேவையில் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ எனும் முன்னாள் இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்)  அதிகாரியின் வாழ்க்கைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. விமானப் படையில் நிலவும் பெண்களுக்கு எதிரான சூழலை இப்படம் சுட்டிக்காட்டுவதாகக் கூறி மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்