Aran Sei

காஷ்மீரில் தீவிரவாதிகளால் குறிவைக்கப்படும் பண்டிட்கள் – பாதுகாக்க முன்வருமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த மசூதி நிர்வாகங்கள்

தீவிரவாத தாக்குதல் அச்சத்தில் இருக்கும் காஷ்மீர் பண்டிட்களின் அச்சத்தை போக்க, அவர்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொது மக்களுக்கு இரண்டு மசூதி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

மசூதி நிர்வாகங்களின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதி (கேபிஎஸ்எஸ்) என்ற அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் பந்திப்பூரா பகுதிகளில் 3 இந்துக்கள் மற்றும் 3 சீக்கியர்கள் குறிவைத்து கொல்லப்பட்டதை அடுத்து, மசூதி நிர்வாகங்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

1990களில் பண்டிட்கள் பெருமளவில் இடம்பெயரக் காரணமாக இருந்த கிளிர்ச்சியின்போது அந்தப் பகுதியிலேயே இருக்க முடிவு செய்த பிரபல மருந்துக் கடைக்காரர் மக்கன் லால் பிந்தோரோ கொல்லப்பட்டது, அந்தப் பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான பண்டிட்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பியுள்ளது.

காஷ்மீரின் பொது சமூகம் தற்போதைய பதற்றத்தை தணிக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற ஒரு பொதுவான கருத்து காஷ்மீர் பண்டிட்கள் இடையே நிலவி வருகிறது.

ஆனால், இதனை மாற்றும் வகையில் ஸ்ரீநகரின் டவுண்டவுன் பகுதியில் இருக்கும் இரண்டு மசூதிகள் பண்டிட்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த மசூதிகள் ஸ்ரீநகர் நகாஷ்போரா பகுதியிலும் மற்றொன்று சாது பாபர்ஷா பகுதியிலும் அமைந்துள்ளது.

மசூதியில் பண்டிட்களுக்கு ஆதரவான அறிவிப்பை வெளியிட்ட ரியாஸ் பட், ”இவர்கள் எங்கள் சகோதரர்கள், நாங்கள் இங்குப் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த நேரத்தில் எந்தத் தவறு நேர்ந்தாலும், அது பயத்தை ஏற்படுத்தும். அதை நாங்கள் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், “என் மத நம்பிக்கைகள் எனக்கு நீதியையும் மனிதாபிமானத்தையும் போதித்துள்ளது. அதைத் தான் நான் செய்துள்ளேன். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக இருங்கள் என்று என் மக்களிடம் (இஸ்லாமியர்களிடம்) கூறியுள்ளேன்” என ரியாஸ் பட் கூறியுள்ளார்.

”பொது சமூகத்தின் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைப் பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பள்ளதாக்கில் உள்ள அனைத்து மஸ்ஜித் நிர்வாகங்களைக் கேட்டுக் கொள்கிறோம்” என மசூதி நிர்வாகங்கள் வாட்சப் மூலம் செய்தி அனுப்பிவருகின்றன.

இதற்குப் பதிலளித்துள்ள கேபிஎஸ்எஸ், “டௌண்டவுன் பகுதியில் இருக்கும் இரண்டு மசூதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்