Aran Sei

வெளியேறும் டிரம்ப் – முடிவுக்குவரும் ஏகபோகம் – விரைவில் ஈரான் எண்ணெய்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஈரான் மற்றும் வெனிசூலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்தியாவின் எண்ணெய் தேவைக்கு ஒரு சில நாடுகளை மட்டுமே சாந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, 2017ஆம் ஆண்டு ஈரான் மற்றும் வெனிசூலா மீது தன்னிச்சையாக பொருளாதார தடை விதித்தார். அதன்பிறகு, அந்த நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொண்டது.

ஈரான் மற்றும் வெனிசூலாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை ஜோ பைடன் அரசு நீக்க வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான் “வாங்குபவனா எனக்கு வாங்கக் கூடிய இடம் அதிகம் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவேன்” என்று கூறியுள்ளார்.

ஒரு காலத்தில், ஈரானிடமிருந்து அதிக எண்ணய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, அணு ஆயுத தடை ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது டிரம்ப் பொருளாதார தடை விதித்தார். இதைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொண்டது.

இதேபோல், வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்குவதற்காக அந்நாட்டின் மீது டிரம்ப் விதித்த தடையை தொடர்ந்து கடந்த சில மாதங்களில் வெனிசூலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொண்டது.

2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராக பைடன் இருந்த சமயம், அமெரிக்கா உட்பட எழு நாடுகள் இணைந்து, ஈரான் அணு ஆயுத தயாரிப்பு தடை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு இடமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உகிலேயே அதிக எண்ணெய் இறக்குமதி செய்யவது மற்றும் பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு, இறக்குமதிக்கான வழிகளை அதிகப்படுதுவது மற்றும் குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க முடியும்.

இந்திய எண்ணெய் நிறுவனமான நயாரா எனர்ஜி, வெனிசூலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த ஜூன் மாதம் நிறுத்திக்கொண்டது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அக்டோபர் மாதம் வரை, டீசலுக்கு பதில் வெனிசூலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதியளித்தது.

இந்நிலையில் “ஏகபோக காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எண்ணெய் உற்பத்தியாளர்கள், வாங்குபவர்களின் நிலையை உணர வேண்டும்” என்று கூறியுள்ள தர்மேந்திர பிரதான், இந்தியா அமெரிக்கா உறவு குறித்து “இருநாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. எங்கள் உறவு பலமாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்