Aran Sei

டிஆர்பி முறைகேடு – ரிபப்ளிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கைது

டிஆர்பி முறைகேடு தொடர்பாக பெறப்பட்ட புகாரில்  ரிபப்ளிக் டிவி யின் முதன்மை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், போலி டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) மோசடிக் கும்பல் தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்வதாக, மதிப்பீட்டு மீட்டர்களின் மூலமாக டிஆர்பி புள்ளிகளை ஆய்வு செய்யும் ஹன்சா ரிசர்ச் என்ற ஏஜென்சியின் அதிகாரி நிதின் தியோகர், பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலிடம் (பார்க்) புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதல் தகவலறிக்கையில் தெரியவந்தது. இந்நிலையில், டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரிபப்ளிக் டிவியின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள்,  பணியாளர்கள் அனைவரும் இதில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல்துறை கூறிவந்தது நினைவுகூரத்தக்கது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த மும்பை காவல்துறையினர் டிஆர்பி புள்ளிகளை அதிகமாகக் கொண்டிருப்பதாகக் கூறும் ரிபப்ளிக் தொலைக்காட்சி, அதிக விளம்பர விகிதங்களைப் பெறுவதற்காக மதிப்பீடு மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்து டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘டி.ஆர்.பி மோசடி’ ரிபப்ளிக் டிவி நிர்வாகிகள் மீது மேலும் ஒரு வழக்கு – மும்பை போலீஸ் அதிரடி

முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட 1,400 பக்க குற்றப்பத்திரிகையில் ரிபப்ளிக் நிறுவனத்தின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் இந்த வழக்கில் அப்ரூவராகி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் என எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (13-12-20) இந்த மோசடியில் தொடர்புள்ளதாக மும்பை காவல்துறையால் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி விகாஸ் கான்சந்தானி கைது செய்யப்பட்டுள்ளார் என எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் டிஆர்பி முறைகேடு வழக்கில் கைது செய்யப்படும் 13 வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

`மும்பை போலீஸ் ஆணையர் மீது ரூ.200 கோடி மானநஷ்ட வழக்கு’ – ரிபப்ளிக் டிவி

ரிபப்ளிக் குழுமம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி ரிபப்ளிக் நிறுவனத்தை நடத்துகிற ஏ.ஆர்.ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த ஒரு வாரத்திற்குள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா காவல்துறை ரிபப்ளிக் நிறுவனத்தின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியையும், அதன் ஊழியர்களையும் “வேட்டையாடுகிறது” என்று ஏ.ஆர்.ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் “இந்த வழக்கில் மகாராஷ்டிரா காவல்துறை எந்தவொரு நபரையும் கைது செய்யாமலே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த மனுவை நீங்கள் திரும்பப் பெறுவது நல்லது” என்று கடுமையாகச் சாடியுள்ளார் என லைவ்லா செய்தி வெளியிட்டுள்ளது.

‘ரிபப்ளிக் டிவி பொய்யான தகவலைப் பரப்புகிறது’ – அர்னாப் மீது பிஏஆர்சி குற்றச்சாட்டு

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான மீனாக்ஷி லேகி ரிபப்ளிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் ”பயனற்றவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் பொழுது மக்கள் அதற்கான இழப்பைச் சந்திக்கிறார்கள். மாஃபியா ஆட்சி தொடங்கிவிட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே” என்று கூறியுள்ளதாக தி ரிபப்ளிக் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்