Aran Sei

‘டி.ஆர்.பி மோசடி’ ரிபப்ளிக் டிவி நிர்வாகிகள் மீது மேலும் ஒரு வழக்கு – மும்பை போலீஸ் அதிரடி

கடந்த அக்டோபர் மாதம் ஒரு போலி டிஆர்பி மோசடிக் கும்பல் தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி எண்களில் மோசடி செய்ததாக BARC நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதல் தகவலறிக்கையில் தெரியவந்தது. இந்நிலையில் டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரிபப்ளிக் டிவியின் இயக்குநர்கள் விளம்பரதாரர்கள் அதன் பணியாளர்கள் அனைவரும் இதில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல் ஆணையர் பரம்பீர் சிங் கூறினார்.

இந்த முறைகேடு வெளியானதிலிருந்து மும்பைக் காவல்துறையின் மீது தன் தாக்குதலைத் தொடங்கியது ரிபப்ளிக் டிவி. இந்த முறைகேடு தொடர்பாக ரிபப்ளிக் டிவியின் நிறுவனரும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி விடுத்த அறிக்கையில்” சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு விசாரணையைத் தலைமை ஏற்று நடத்திய காவல் ஆணையர் பரம்பீர் சிங்கின் விசாரணை குறித்துக் கேள்வி கேட்டதால் ரிபப்ளிக் டிவிக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது ரிபப்ளிக் டிவி சார்பாக மானநஷ்ட வழக்கு போட உள்ளோம்“ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர்கள் குழுவுக்கு எதிராக முதல் தகவறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்திருக்கிறது மும்பைக் காவல்துறை.

மும்பைக் காவல் ஆணையர் பரம்பீர் சிங்கிற்கு எதிராக மும்பைக் காவல் துறை ஊழியர்களிடையே அதிருப்தியைத் தூண்டுவதாகவும் மும்பைக் காவல்துறையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் ரிப்பளிக் டிவியின் ஆசிரியர் குழுவுக்கு எதிராக முதல் தகவலறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்திருக்கிறது மும்பைக் காவல்துறை.

சப் இன்ஸ்பெக்டர் சசிகாந்த் பவார் என்.எம் ஜொஷி மார்க் காவல்துறையில் உள்ள சமூக ஊடகப் பிரிவின் சிறப்புக் கிளையில் இந்தப் புகாரை அளித்தார். இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 3 (அவதூறு ஏற்படுத்தியதற்கான அபராதம்) பிரிவு 500 ( அவதூறு ஏற்படுத்தியதற்கான தண்டனை ) பிரிவு 34 (அவதூறு செய்ய வேண்டும் எனும் ஒற்றைப் பொது நோக்கத்தோடு பலர் செயல்படுவது) ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவியின் துணை ஆசிரியர் மற்றும் செய்தித் துறைப் பொறுப்பாளருமான சகாரிகா மித்ரா, இணை ஆசிரியர் மற்றும் தொகுப்பாளருமான ஷிவானி குப்தா, துணை ஆசிரியர் ஷவான் சென் மற்றும் நிர்வாக ஆசிரியர் நிரஞ்சன் நாராயணசாமி ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் “மும்பைக் காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை ஒளிபரப்பி மும்பைக் காவல்துறையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக” கூறப்பட்டிருக்கிறது.

மேலும் புகார்தாரர் சசிகாந்த் பவாருடைய கூற்றுப்படி அக்டோபர் 22 ல்  ரிபப்ளிக் டிவி வெளியிட்ட செய்தியில் “மும்பையின் உயர் காவல் அதிகாரிக்கு எதிராக மும்பைக் காவல்துறைக்குள் கிளர்ச்சி வளர்ந்து வருவதாக ரிபப்ளிக் டிவிக்குப் பிரத்யேகச் செய்தி கிடைத்திருக்கிறது. இதனால் மும்பைக் காவல்துறையினருக்குள்ளேயே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது ” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது என்று அவர் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்