Aran Sei

உத்தர்காண்ட் பாஜகவில் கோஷ்டி மோதல் – முதல்வர் பதவி விலகினார்

image credit : thewire.in

த்தர்காண்ட் மாநிலத்தின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற ஒரு ஆண்டு இருக்கும் போது கடந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்-ஐ பதவி விலகும்படி பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநில ஆளுனர் பேபி ராணி மவுர்யாவிடம் நேற்று கொடுத்துள்ளார்.

அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் தொடரும்படி ஆளுனர் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தர்காண்ட் பாஜகவில் கலகம் – முதலமைச்சர் மாற்றப்படுவாரா?

டெல்லி மேலிடத் தலைவர்களை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த திரிவேந்திர சிங் ராவத், உத்தர்காண்ட் திரும்பியதும் தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன். நான்கு ஆண்டுகளாக மாநில முதலமைச்சராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வேறு ஒருவருக்கு முதலமைச்சராக செயல்பட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கட்சி முடிவு செய்து விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவர் நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது, “அதற்கு விடை காண நீங்கள் டெல்லிக்குத்தான் போக வேண்டும்” என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

மாநில பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்குக் கூடி புதிய தலைவரை (முதல்வரை) தேர்ந்தெடுக்கவிருக்கிறது.

பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் கட்சிக்குள் கலகம் : விபரங்கள்

பாஜக மேலிடத்தின் சார்பில் சத்தீஸ்கரின் முன்னாள் முதலமைச்சர் ரமண் சிங் மேலிட பார்வையாளராக உத்தரகாண்டின் டெஹ்ராடூனுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் தலைமை மாற்றம் தொடர்பாக கலந்தாலோசிக்கப் போவதாகவும், “அவர்களது உணர்வுகள் மதிக்கப்படும்” என்றும் ரமண் சிங் கூறியுள்ளார்.

சென்ற வாரம், ரமண் சிங்கும், பாஜகவின் உத்தர்காண்ட் பொறுப்பாளர் துஷ்யந்த் குமார் கவுதமும் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் முதலமைச்சரையும் சந்தித்து பேசி சமரசம் செய்ய முயற்சித்தனர். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை ராவத் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் பாஜக தலைவர் ஜே பி நட்டாவையும் பிற தலைவர்களையும் சந்தித்தார்.

கட்சிக்குள் பெரிய அளவில் எதிர்ப்பு குழு ஒன்று உருவாவதை தடுப்பதற்காக திரிவேந்திர சிங் ராவத்தை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பாஜகவினர் கூறுவதாக தி வயர் தெரிவிக்கிறது. பல சட்டப் பேரவை உறுப்பினர்கள் திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்படும் பாணியில் அதிருப்தி அடைந்திருந்தனர் என்றும் தி வயர் கூறுகிறது.

ஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு

2017-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 70 இடங்களில் 57-ல் வெற்றி பெற்றிருந்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உத்தர்காண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, 2000-ம் ஆண்டில் முதல் இடைக்கால சட்டப்பேரவை அமைக்கப்பட்ட போது பாஜகவின் நித்யானந்த் ஸ்வாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டு மூன்று மாதங்களுக்குள் அவருக்குப் பதிலாக பகத்சிங் கோஷியாரி முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

2007 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, 2007 முதல் 2009 வரை புவன் சந்திர கந்தூரியும், 2009 முதல் 2011 வரை ரமேஷ் பொக்ரியாலும், 2011 முதல் 2012 வரை மீண்டும் புவன் சந்திர கந்தூரியும் முதலமைச்சர் பதவி வகித்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்