Aran Sei

திரிபுராவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய முன்னாள் முதல்வர் – சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரை பாஜகவினர் தாக்கியதாக புகார்

திரிபுராவில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் பிப்லல் குமார் தேப்பே தவறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டியிருந்த சில மணி நேரங்களில், அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுதான் தாஸ், பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்மீதான திடீர் உயர்வுக்கு எதிராக நடைபெற்ற  பேரணியை ஞாயிறன்று முடித்துவிட்டு, ராஜ்நகர் பகுதியின் தெருமுனைகளில் கட்சி தொண்டர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது சுதான் தாஸ் தாக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் ஐந்து இடது சாரி கட்சிகளின் அகில இந்திய திட்டத்தின் பகுதியாக ராஜ்நகரில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ராஜ்நகர் பேரணியை முடித்தபின்பு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒரு தெருமுனையில் கூடினர். அப்போது அங்கு வந்த பாஜகவினர், மார்க்சிஸ்ட் கட்சியினரை செங்கல் மற்றும் மட்டைகள் கொண்டு தாக்கினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் சுதான் தாஸ் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பல உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களும் காயமடைந்தனர்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி புனித யாத்திரை நடத்தும் உத்தரகண்ட் அரசு – மீண்டும் கொரோனா பரவலுக்கு வழிவகுக்குமோ?

”சுதான் தாஸ் வீட்டையும் தாக்கிய பாஜகவினர், வீட்டின் மீது பட்டாசு மற்றும் செங்கல் கற்களை வீசனர். இதில் சுதான் தாஸ் மனைவி ஜெயா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக தலைமை, பாஜகவின் பெயரை இழிவுபடுத்த இடது சாரிகள் முயற்சிப்பதாக கூறியுள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டதாக கூறிய முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் மற்றும் ஆளுநர் தொடர்பான பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை அணுக இருப்பதாக  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்