Aran Sei

பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்

`மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மீது பெரிய அளவில் பொதுமக்களுக்குக் கோபம் உள்ளதைத் தன்னால் உணர முடிகிறது’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக `தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அவர்களின் குடும்பத்துடன் மதிய உணவு எடுத்துக்கொள்கிறார் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

பிர்சா முண்டா என்ற புரட்சியாளரின் சிலைக்கு மாலையிட்டுப் பேசிய அமித் ஷா, “கடந்த இரவு முதல் மேற்கு வங்கத்தில் இருக்கிறேன். மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிரான பெரிய கோபத்தை மக்களிடத்தில் பார்க்கிறேன். ஒரு பக்கம் விரக்தியில் இருந்தாலும் மறுபக்கம் பிரதமர் மோடி தலைமையிலான மாற்றம் நிச்சயம் நம்பிக்கை அளிப்பதையும் மக்கள் உணர்கின்றனர்.” என்று கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “பாஜக தொண்டர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்கள், வன்முறைகள் மம்தா பானர்ஜி ஆட்சிக்கான சாவுமணியாகவே நான் பார்க்கிறேன். அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயமாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் ஏழைகளுக்கான திட்டங்கள் மம்தா ஆட்சியில் ஏழைகளுக்குச் செல்வதில்லை. 80க்கும் அதிகமான திட்டங்கள், ஏழைகள், பழங்குடியினருக்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவை எதுவும் மம்தா ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

“மத்திய அரசின் திட்டங்களை மறைப்பதன் மூலம் மம்தா பானர்ஜி, பாஜக வெற்றியைத் தடுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார். ஆனால், அவருக்கு நான் கூறுவது என்னவெனில் மத்திய அரசின் திட்டங்களை ஏழைகளுக்குக் கொண்டு சென்றால் அவர்கள் மம்தாவையும் மதிப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா பல சாதிச் சமூகத்தின், குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளார். அப்படியே பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டில் ‘லஞ்ச்’ எடுத்துக்கொள்கிறார் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் நம்கானா பகுதியின் மற்றொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி “நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மீதும், பழங்குடியினர் மீதும், பத்திரிகையாளர் மீதும் பாஜக அரசு தாக்குதல் நடத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பிரதமராக மீண்டும் மோடியைத் தேர்ந்தெடுத்தால், அவர் நாட்டை அழித்துவிடுவார். ஒரு வாக்கு கூட செலுத்தாமல் அவரைத் தோற்கடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்