Aran Sei

” இந்தியாவில் அளவுக்கதிகமான ஜனநாயகம் ” – நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த்

அமிதாப் காந்த் - Image Credit : Hindustan Times

“இந்தியாவில் அளவுக்கதிகமான ஜனநாயகம் இருப்பதால் கடினமான சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியவில்லை” என்று நிதி ஆயோகின் தலைவர் அமிதாப் காந்த் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பின்னர் தான் அப்படி பேசவே இல்லை என்று மறுத்து அமிதாப் காந்த் ட்வீட் செய்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ், மின்ட், போன்ற பத்திரிகைகள் பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட அமிதாப் காந்தின் பேச்சு பற்றி செய்தியை நீக்கி விட்டன என்று த வயர் தெரிவிக்கிறது.

“நிதி ஆயோகின் தலைவர் அமிதாப் காந்த், நம்மிடம் அளவுக்கதிகமான ஜனநாயகம் உள்ளது! இதில் சுரங்கத் துறை, விவசாயத் துறை போன்ற சீர்திருத்தங்களை புகுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார். இது தொடர்பாக கண்டனங்களை எதிர்கொண்ட அவர் பின்னர், இவ்வாறு சொல்லவே இல்லை என்று சாதிக்கிறார்.” என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ட்வீட் செய்துள்ளார்

“கோதி ஊடகங்கள் (மோடியின் செல்ல ஊடகங்கள்), அவரது இந்தக் கருத்தை நீக்கி விட்டன. ஆனால், அவர்கள் வீடியோவை நீக்க மறந்து விட்டார்கள்” என்று கூறிய பிரஷாந்த் பூஷன் அந்த வீடியோவின் நகலையும் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்-ன் உடைமையாளரான வேதாந்தா குழுமத்தின் ஆதரவில் வலதுசாரி செய்தித் தளமான ஸ்வராஜ்யா, “ஆத்மநிர்பர் பாரதத்தை நோக்கி” (The Road to Atmanirbhar Bharat) என்ற தலைப்பில் இந்த இணைய வழி நிகழ்வை நடத்தியுள்ளது.

நிதி ஆயோக் (இந்தியாவை உருமாற்றுவதற்கான தேசிய நிறுவனம்) 2015-ம் ஆண்டு திட்ட கமிஷனுக்கு பதிலாக, மோடி அரசால் உருவாக்கப்பட்டது. அதன் தற்போதைய தலைவராக இருக்கும் அமிதாப் காந்த் 1980 வகுப்பைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.

இணைய வழி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், “இப்போதைய அரசு கடினமான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அரசியல் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது” என்று அமிதாப் காந்த் பேசியுள்ளார்.

தற்போது விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விவசாயத் துறையும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று அமிதாப் காந்த் கூறினார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொள்முதல் நிலையங்கள் அல்லது மண்டிகள் ஒழிக்கப்படப் போவதில்லை. மண்டிகளும் தொடரும், குறைந்தபட்ச ஆதார விலையும் தொடரும். விவசாயிக்கு மாற்று தேர்வுகள் கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்