Aran Sei

வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: சட்ட நகல்கள் எரிப்பு

credits: dinakaran.com

த்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்ட நகலை எரித்தும் கிழித்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் விவசாயிகள் இணைந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

வேளாண் மசோதாக்களின் நகலை எரித்து கண்டனத்தை பதிவு செய்தனர். போராட்டத்தை முன்னரே அறிவித்திருந்ததால், குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி 40 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எஸ்.டி.பி,.ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் மசோதாக்களை எதிர்த்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டும் சட்ட நகல்களை கிழித்து எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழு தலைமையில் ரயில் நிலையத்தின் முன் விவசாயிகள் முழுக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மசோதாக்களுக்கு எதிராக முழக்கமிட்டு நகல்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவலர்கள் 50 பேரை கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் விவசாய சங்கம் வேளாண் மசோதாக்களை எதிர்த்து தண்டவாளத்தின் மீது அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தடத்தில் செல்லும் 14 சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 24 முதல் 26-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்