Aran Sei

உத்தர்காண்டில் புதிய முதல்வர் பதவியேற்பு – ” டெல்லியில் இருந்து மாநிலங்களை கட்டுப்படுத்துவதன் வரம்பைக் காட்டுகிறது “

image credit : thehindu.com

த்தர்காண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் நேற்று பதவியேற்றுள்ளார்.

பதவிக் காலம் முடிந்து அடுத்த தேர்தல் நடக்க இன்னும் 1 ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், முந்தைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை பதவி விலக வைத்து விட்டு, புதிய முதலமைச்சரை நியமித்திருக்கிறது பாஜக மேலிடத் தலைமை.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பேபி ராணி மவுர்யா, தீரத் சிங் ராவத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவை பாஜக கூட்டம், மேலிட பார்வையாளர்கள் ரமண் சிங், துஷ்யந்த் கவுதம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர்காண்ட் பாஜகவில் கோஷ்டி மோதல் – முதல்வர் பதவி விலகினார்

இது “டெல்லியிலிருந்து ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதற்கான வரம்புகளைக் காட்டுகிறது” என்று தி ஹிந்து தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 57 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பலம் ஈட்டியதைத் தொடர்ந்து, பாஜக மேலிடம் திரிவேந்திர சிங் ராவத்தை முதலமைச்சராக நியமித்தது.

மேலிடத் தலைமையால் திணிக்கப்பட்ட திரிவேந்திர சிங் ராவத், ஆரம்பத்திலிருந்தே மாநிலத்தின் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தி ஹிந்து கூறுகிறது. முடிவுகள் எடுப்பதில் உள்ளூர் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகாரம் மேலும் மேலும் மையப்படுத்தப்பட்டது என்றும் நிர்வாகம் அதிகாரிகளின் கையில் போய் விட்டது என்றும் தி ஹிந்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 70 உறுப்பினர் கொண்ட சட்டப் பேரவையின் 57 பாஜக உறுப்பினர்களில் பாதி பேர் முதலமைச்சருக்கு எதிராக போய் விட்டதால், அவரை மாற்றுவதைத் தவிர கட்சி மேலிடத் தலைமைக்கு வேறு வழி இருக்கவில்லை.

உத்தர்காண்ட் பாஜகவில் கலகம் – முதலமைச்சர் மாற்றப்படுவாரா?

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாஜகவில், மாநிலங்களில் வலுவான தலைவர்களை புறக்கணித்து புதியவர்களை முதலமைச்சராக்கும் போக்கு ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாதகமாக முடிந்தது என்றும் அதற்குக் காரணம் முதல்வராக நியமிக்கப்பட்ட தலைவர்களின் செயல்படும் பாணி என்றும் தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது.

போதுமான திறமைகளும் பொதுமக்கள் ஆதரவும் இல்லாத தலைவர்கள் நியமிக்கப்பட்ட மாநிலங்களில் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி வளர்கிறது என்றும் அது கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்