Aran Sei

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கிய மோடி: டைம்ஸ் பத்திரிகை

Image Credits: Maktoob Media

செவ்வாய்க்கிழமை டைம்ஸ் பத்திரிகை, ‘2020-ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களின்’ பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களும் அடங்குவர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய டெல்லியின் ஷாஹீன் பாகை சேர்ந்த, பில்கிஸ்-ம் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

டெல்லி தனது பனிக்காலத்தின் தீவிரத்தை காட்டிக்கொண்டிருந்த பொழுதிலும், தலையில் துப்பட்டாவையும், முகத்தில் புன்னகையையும் தாங்கியபடி பில்கிஸ் (82), நூற்றுக்கணக்கான பெண்களுடன் ஒரு கூடாரத்தின் கீழ் அமர்ந்து போராடிக்கொண்டிருந்தார். இவரை அங்கிருந்த பலராலும் அன்போடு பாட்டி (தாதி) என்று அழைத்தனர்.

“மோடி அரசின் பெரும்பான்மைவாத அரசியலில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்கள் அமைப்பு ரீதியாக மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடிய சமூக ஆர்வலர்களும், மாணவ தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உறுதி அளிக்கும் வகையிலும் பில்கிஸ் இருந்தார். இந்தப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு நாடு முழுவதும் அமைதியாகப் போராடியவர்களுக்கும் பில்கிஸ் ஊக்கமளித்தார்,” என்று பத்திரிகையாளர் ராணா அயூப் டைம்ஸ் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை குறிப்பிடுகிறது.

“விடைபெறும்போது அவர் என்னிடம் ‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடும்வரை நான் இங்கேதான் அமர்ந்திருப்பேன். இந்த நாட்டின் குழந்தைகளும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளும் நீதி மற்றும் சமத்துவத்தின் காற்றைச் சுவாசிப்பதற்காக அமர்ந்திருப்பேன்’ என்று பில்கிஸ் கூறினார்”

“கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தை உலகம் அங்கீகரிக்கும் வகையில் பில்கிஸ்-க்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்” என ராணா அயூப் குறிப்பிட்டிருந்தார்.

Image Credits: The Indian Express
Image Credits: The Indian Express

சிஏஏ வெளிப்படையாக பாரபட்சமாக உள்ளது என்று கூறி உலகளவில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக அண்டை நாடுகளிலிருந்து வெளியில் அனுப்பப்பட்ட சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க மாதத்தை அடிப்படையாக வைத்தது, இந்தச் சட்டம். நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தொடங்குவதற்கான திட்டத்துடன் இணைந்து, இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று பலர் அஞ்சினர் என்று தி வையர் செய்தி குறிப்பிடுகிறது.

ஷாஹீன் பாகில் 101 நாட்கள் நடந்த இப்போராட்டம் கொரோனா கால பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் 24-ம் தேதி காவலர்களால் கலைக்கப்பட்டது.

டைம்ஸ் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பிடித்துள்ளார். ஆனால், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளை மோடி கேள்விக்குள்ளாகியுள்ளார் என்று டைம்ஸ் பத்திரிகையின் குறிப்பை எழுதியுள்ள அதன் ஆசிரியர் விக் கூறியுள்ளார்.

“இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்கள் 80%-ஐ மக்களைக் கண்ட இந்து சமுதாயத்திலிருந்து வந்தவர்கள் தான், இருப்பினும் மோடி மட்டும்தான் வேறு [சிறுபான்மை மதத்தினர்] யாருமே பொருட்டில்லை என்பது போல் ஆட்சி செய்துள்ளார். மக்களுக்கு அதிகாரம் வழங்குவது என்ற ஜனரஞ்சக வாக்குறுதியின் பேரில் முதல் பதவிக் காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது இந்து-தேசியவாத பாரதிய ஜனதா கட்சி மேல்தட்டு அதிகாரத்தை மட்டும் நிராகரிக்கவில்லை. அது  பன்மைத்துவத்தையும் நிராகரித்து, குறிப்பாக இந்தியாவின் இஸ்லாமியர்களைக் குறிவைத்தது.”

“நோய்த்தொற்று என்ற பெரும் சோதனை எதிர்ப்புப் போராட்டங்களை முடக்குவதற்கான ஒரு சாக்காக மாறியது. உலகின் மிகவும் துடிப்பான ஜனநாயகம் ஆழமான இருளில் விழுந்தது,” என்றும் டைம்ஸ் கட்டுரை குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்