Aran Sei

’சிஏஏ போராட்டம் தொடரும்’: டைம்ஸ் இதழில் இடம்பெற்ற பில்கிஸ் பாட்டி

credits:indianexpress.com

லகின் செல்வாக்கு மிக்க நூறு மனிதர்கள் பட்டியலில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடிவந்த மூதாட்டி பில்கிஸ் இடம்பெற்றுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை எதிர்த்து, பில்கிஸ் நண்பர்கள் அஸ்மா கத்தூன், சர்வாரி ஆகியோருடன் இணைந்து, ஷாஹீன்பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லியின் டிசம்பர் மாத கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சட்டம் இயற்றப்பட்ட நாள் முதல், இந்த மூன்ற பெண்களும் ஷாகீன் பாக் போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்குபெற்று வந்தனர். ஷாகீன் பாக் பாட்டிகள் என்றும் இவர்கள் பிரபலமடைந்தார்கள்.

டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2020-ம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்திய நூறு தலைவர்களின் பட்டியலில் 82 வயதான பில்கிஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.

 

டைம்ஸ் பட்டியலில் இடம்பெற்றது குறித்து பில்கிஸ், “எங்கள் கோரிக்கைகளைக் கேட்டு அரசாங்கம் சிஏஏ-வை ரத்து செய்திருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.

டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள ரானா ஆயுப்-இன் கட்டுரையில் “என் நரம்புகளில் ரத்தம் ஓடும்வரை இங்கு நான் போராட்டத்தில் ஈடுபடுவேன். அப்போதுதான் இந்த நாட்டின் குழந்தைகளும் உலக மக்களும் நீதி மற்றும் சமத்துவம் நிறைந்த காற்றை சுவாசிக்க முடியும்” என பில்கிஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

தி வயர் செய்தித் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “சிஏஏ-க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், நாம் முதலில் கொரோனாவை வென்றெடுக்க வேண்டும்” என பில்கிஸ் கூறியுள்ளார்.

”முத்தலாக் மசோதாவின் போது நாங்கள் அமைதியாக இருந்தோம், பாபர் மசூதி இடிப்பின்போதும் எதுவும் சொல்லவில்லை, பணமதிப்பிழப்பின் போதும் கூட, இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் அமைதியாக இருப்பது?” என பில்கிஸ் கூறுவதை ப்ரூட் செய்தித்தளம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக போராட்டத்தை தொடர முடியாமல் போனது குறித்து வருந்துவதாகவும் பில்கிஸ் கூறியுள்ளார்.

இதழாளர் ரானா ஆயூப், ”பில்கிஸ் இந்த அங்கீகாரத்துக்கு உரியவர். இவர் மூலம் கொடுங்கோலை எதிர்ப்பதற்கான சக்தியின் வலிமையை உலகம் அறியும்” என இதழில் எழுதியுள்ளார்.

சிஏஏ திருத்தசட்டத்தை எதிர்த்து ஷாகீன் பாகில் நடைபெற்ற போராட்டம் நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்தது. மார்ச் மாதம் 24-ம் தேதி வரையில் நடந்த போராட்டம், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தொடரப்படவில்லை.

ஷாகீன் பாகைத் தொடர்ந்து, சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி சென்னை, கொல்கத்தா மும்பை ஆகிய நகரங்களிலும் போராட்டம் எதிரொலித்தது.

டைம்ஸ் இதழின் இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பேராசிரியர் ரவீந்திர குப்தா, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்