Aran Sei

`வெற்றிக்குப் பாராட்டு இல்லை; தோற்றால் மட்டும் பொறுப்பேற்கணுமா?’- இளைஞர் காங்கிரஸ்

Image Credits: DNA India

பீகார் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் வைத்துள்ள விமர்சனங்களால் கட்சிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“மக்கள், காங்கிரஸை ‘நம்பிக்கையுள்ள மாற்றாக’ பார்க்கவில்லை” என்றும் “கட்சித் தலைமை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை” என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் கட்சி, அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை நன்றாக அறிந்துள்ளது. ஆனால், அது அவற்றைச் சரிசெய்யத் தயாராக இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸின் சட்டத் துறையின் தலைவருமான டங்கா, கபில் சிபலின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார். “கட்சி சரிவதை எங்களால் பார்க்க முடியாது. மற்றவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சனைகளின் காரணமாகப் பேசாமல் இருக்கலாம். எனக்கும் கபிலுக்கும் வேறு பிரச்சினைகள் இல்லை. காங்கிரஸை சரிவிலிருந்து மீட்பதுதான் எங்களின் பிரச்சனையாக உள்ளது. எங்களைப் போன்றவர்கள் முன் வந்து அதைப் பற்றிப் பேசவில்லை என்றால், வரலாறு எங்களை மன்னிக்காது” என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு‘ டங்கா கூறியுள்ளார்.

கபில் சிபல், காங்கிரஸ் கட்சியின் மீதான தனது விமர்சனத்தைப் பொதுவெளியில் தெரிவித்திருப்பது வருத்தம் அளிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ள அசோக் கெஹ்லோட், “கபில் சிபல், உள்கட்சி பிரச்சினையை ஊடகங்களில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இது நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. காங்கிரஸ் 1969, 1977, 1989-ம் ஆண்டுகளிலும், பின்னர் 1996-ம் ஆண்டிலும், பல்வேறு நெருக்கடிகளைக் கண்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் எங்கள் சித்தாந்தம், திட்டங்கள், கொள்கைகள் மற்றும் கட்சித் தலைமையின் மீதான உறுதியான நம்பிக்கை காரணமாக நாங்கள் வலுவாக மீண்டெழுந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் ஒவ்வொரு நெருக்கடியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதுடன், சோனியா-ஜியின் திறமையான தலைமையின் கீழ் 2004- ஆம் ஆண்டில் யுபிஏ அரசாங்கத்தையும் அமைத்தது… இதில் இருந்தும் நாங்கள் மீள்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கபில் சிபலை விமர்சித்துள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ்.பி.வி, “காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெறும்போது, அதற்காக ஒருபோதும் ராகுல்-ஜி பாராட்டப்படுவதில்லை. ஆனால், காங்கிரஸ் எங்காவது தேர்தலில் தோற்றால், ராகுல் காந்தி அதற்காகப் பொறுப்பேற்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இன்று இந்தக் கேள்விகளை எழுப்புவர்களிடம், அமைப்பை வலுப்படுத்த நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்