உள்துறை அமைச்சகம் முதன்முறையாக ‘இந்தியாவில் தீவிரமயமாக்கலின் நிலை’ குறித்த ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆய்வு தீவிரமயமாக்களைச் சட்டப்பூர்வமாக வரையறுக்க முயற்சிப்பதுடன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களையும் பரிந்துரைக்கும்.
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் உள்துறை அமைச்சகத்தின் ஒரு சிந்தனைக் குழுவாகும். 2018-ம் ஆண்டு இந்தப் பணியகம், ஆராய்ச்சித் திட்டங்களை வழங்கக் கல்வியாளர்களுக்கும் சட்ட வல்லுநர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
அதன் மூலம், பிபிஆர்டி 75 திட்டங்களைப் பெற்றது. அதில், ‘இந்தியாவில் தீவிரமயமாக்கலின் நிலை – தடுப்பு மற்றும் தீர்வுகள் பற்றிய ஒரு ஆய்வு’ மற்றும் ‘கைதிகளின் மறுவாழ்வு மீதான திறந்த சிறைச்சாலைகளின் செயல்பாடு மற்றும் தாக்கம்’ எனும் இரு ஆய்வுத் திட்டங்களை உள்துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்தது.
டெல்லி, தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தின் (என்எல்யூ) குற்றவியல் மற்றும் பலியியல் பிரிவின் இயக்குநர் ஜி.எஸ்.பஜ்பாய் ‘தீவிரமயமாக்கல்’ குறித்த ஆய்வை மேற்கொள்வார்.
“இந்த ஆய்வு மதம்-சார்பற்ற நிலையில் நடத்தப்படும். உண்மைகள் மற்றும் பதிவான வழக்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். தீவிரமயமாக்கல் இன்னும் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை. ஆகையால், தீவிரமயமாக்கல் தொடர்பான சட்டத்தைக் காவல்துறையினர் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது வழிவகை செய்கிறது. இது வரையறுக்கப்பட வேண்டும் மற்றும் யுஏபிஏ-வில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்” என்று ஜி.எஸ்.பஜ்பாய் தி இந்து-விடம் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் காலத்து இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) மாற்றியமைக்க உள்துறை அமைச்சகம் குற்றவியல் சீர்த்திருத்தங்களுக்கான குழுவை அமைத்தது. பஜ்பாய் இந்தக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். “கள ஆய்வு மற்றும் மக்களுடன் நேர்காணல்கள் தேவைப்படுவதால் இந்த ஆய்வு முடிவுக்கு வர ஒரு ஆண்டு ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தீவிரமயமாக்கல் முறையாகக் கவனிக்கப்பட வேண்டும். இதற்கான ஒரு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். இது வெறுமனே காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இந்திய மக்கள் மதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குர்ஆன், கீதை அல்லது பைபிள் போன்ற புனித நூல்களில் கூறப்பட்டுள்ளதைச் செய்யத்தான் நாம் முயற்சிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
‘தவறாக வழிகாட்டப்படும்’ இளைஞர்கள்
“காவலர்களால் எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் எதிர்பார்ப்புக்கு முரணான விளைவை ஏற்படுத்தும். இதன் மூலம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள். ஆனால் எவ்விதத்திலும் இது குற்றவாளிகளைப் பாதிக்காது” என்று பஜ்பாய் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மகாராஷ்டிராவை ஆராய்ந்தோம். அங்கு பல இளைஞர்கள் இந்தத் தன்மையிலிருந்து வெளிவந்துள்ளனர். இளைஞர்களை சிறையில் அடைப்பதால் இதைச் சாதிக்க முடியாது. சமூகத்தில் சரியான சிந்தனையுள்ளவர்கள் அணிதிரட்டப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.