Aran Sei

‘கார்கில் பெண்’ணுக்குத் தடை இல்லை : டெல்லி உயர்நீதி மன்றம்

Image Credits: The Hindu

முன்னாள் இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) அதிகாரி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம், ஜான்வி கபூர் நடிப்பில், ஆகஸ்ட் 12-ம் தேதி, நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.

‘குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ எனும் இப்படத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளைத் தவறாகக் சித்தரித்துள்ளார்கள் என்றும் பாலியல் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்றும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை ஒளிபரப்பத் தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் விமானப்படை அதிகாரிகளைத் தவறாகச் சித்தரிக்கும் விவகாரத்தில் குஞ்சன் சக்சேனாவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ராஜீவ் ஷக்தர், சக்சேனாவிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏதேனும் ஒப்பந்த விதிமுறையை மீறியுள்ளார்களா என்பதைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சக்சேனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் இது “அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறு அல்ல, ஆனால் அவரது கதையால் உந்தப்பட்டது” என்பது படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்று வாதாடினார் என என்ந்த.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

“இத்திரைப்படம் ஐ.ஏ.எஃப் அதிகாரிகளை உயர்வாகவே காண்பித்துள்ளது” என்று சக்சேனா தனிப்பட்ட முறையில் உணர்ந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தாரென அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதால் தற்போது தடை விதிக்க முடியாது” என்று கூறிய நீதிபதி, தர்மா தயாரிப்பு நிறுவனம், கரண் யஷ் ஜோஹர், ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவற்றின் தரப்பு விளக்கங்களையும் கேட்டுள்ளார்.

இப்படக்குழுவினர் மாதிரிக்காட்சிகளைக் காட்டவில்லை என்றும். தடையில்லா சான்றிதழ் பெறவில்லை என்றும், எந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்றும் மத்திய அரசு தரப்பு கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்