Aran Sei

ராணுவ வீரர்களின் நிலை குறித்து `தி இந்து’ வெளியிட்டது பொய்ச் செய்தியா?

டாக்கின் பாங் ஆங் சோ ஏரியின் வடக்கே இரண்டு முக்கியமான பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்திருப்பதாகப் பாஜகவைச் சேர்ந்த லாடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துப்ஸ்டான் சிவாங் தெரிவித்த தகவலை மத்திய அரசின் செய்தித் தகவல் மையம் (Press information bureau) மறுத்துள்ளது.

“எல்லையில் நிலைமை மோசமாக உள்ளது. சீன ராணுவம் எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்ததுடன் பாங்ஆங் சோ ஏரியின் வெண்ணீர் ஊற்று உட்பட மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் முழுமையாக அங்கிருந்து வெளியேறவில்லை. அங்கிருக்கும் மக்கள் இதைத் தெரிவிக்கின்றனர்” என்று துப்ஸ்டான் சிவாங் தி இந்து பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

“நமது ராணுவ வீரர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தைகளின் மூலம் சீனாவைப் பணியவைக்க முடியவில்லை என்றால், ராணுவ வீரர்களுக்குச் சரியான தங்கும் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்” என்றும் துப்ஸ்டான் சிவாங் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் செய்தித் தகவல் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தி இந்து வெளியிட்ட செய்தியைக் குறிப்பிட்டு, “சீன ராணுவம் எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்ததுடன் பாங்ஆங் சோ ஏரியின் வடக்கே ஃபிங்கர் 2 மற்றும் 3 பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதாக தி இந்து கூறியுள்ளது.” என்று குறிப்பிட்டு இது பொய்ச் செய்தி என்றும் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் இதை மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தகவல் பதிவிடப்பட்ட பிறகு, துப்ஸ்டான் சிவாங்கைத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தன்னுடைய நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாக தி இந்து -விடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்