Aran Sei

குளிரிலும் மழையிலும் போராடும் விவசாயிகள் – கூடார நகர் உருவாக்கம்

டெல்லி எல்லையில் நிலவும் கடும் குளிரிலிருந்து, மழையிலிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களை காத்துக்கொள்ள ஒரு கூடார நகரை உருவாக்கியுள்ளனர்.

டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கில் வைத்து, ஒரு எரிபொருள் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட கூடாரங்களைக் கொண்ட ஒரு கூடார நகரை நிறுவியுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

பெரிய அளவிலான பச்சை வண்ண கூடாரங்களிலும், சிறிய அளவிலான சாம்பல் வண்ண கூடாரங்களிலும், ஆக மொத்தம் 500 பேர் வரை தங்கிக்கொள்ளலாம் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு

இந்தக் கூடாரங்கள் மழை மற்றும் கடும் குளிரிலிருந்து விவசாயிகளை காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று, பல விவசாயிகள் மழையில் நனைந்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால், கூடாரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, முதற்கட்டமாக இந்த 150 கூடாரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று போராட்ட ஏற்பாடுகளுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜத்தின் சிங் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்துள்ளது – மம்தா பானர்ஜி

“இந்தக் கூடாரங்கள் போர்வைகளுடனும் மெத்தைகளுடனும் சேர்த்தே அமைக்கப்பட்டுள்ளன. சில கூடாரங்களில் ஐந்து பேர் வரை தங்க முடியும். சிலவற்றில் 2-3 பேர் வரை தங்கலாம்.” என்று ஜத்தின் சிங் தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு கூடாரங்களின் பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்த நேரத்திலும் கூடாரங்களை எடுத்துக் கொள்ளலாம், என்று ஜத்தின் சிங் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: தமிழகத்தில் நடந்த ரூ.110 கோடி ஊழல்

மேலும், “சொந்த லாரிகள் மற்றும் டிராக்டர்கள் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் இந்தக் கூடாரங்களில் இரவு நேரங்களில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். வெவ்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியை நோக்கி வரும் பலர் மாலை அல்லது இரவில் தான் இந்த எல்லையை அடைகிறார்கள். இந்த கூடார நகரம் அவர்களுக்கு உடனடி தங்குமிடங்களாக இருக்கும்.” என்று ஜத்தின் சிங் விளக்கியுள்ளார்.

இந்த கூடார நகரத்தில் தன்னார்வலராக உள்ள பாட்டியாலா பல்கலைக்கழக மாணவரான லவ்தீப் சிங், “நான் ஐந்து நாட்களுக்கு முன்பு என் தாய் மற்றும் சகோதரியுடன் இங்கு வந்தேன். அப்போதிருந்து நாங்கள் இங்கு தங்கியுள்ளோம். பெட்ரோல் பம்பிலேயே தண்ணீர், சுகாதார வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.” என்று தன் அனுபவத்தை தி இந்துவிடம் பகிர்ந்துள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?

இந்தக் கூடாரங்களை ஹேம்குண்ட் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்