Aran Sei

தனிஷ்க் விளம்பரம் – மத ஒருமைப்பாட்டைக் கண்டு மிரளும் இந்துத்துவர்கள்

கத்வம் (ஒருமைப்பாடு) எனும் பெயரில் இந்து முஸ்லிம் இணையினர் திருமணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரப் படம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையைச் சந்தித்ததால் அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வப் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்துக்குச் சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் நகை அணிகலன்கள் நிறுவனமான தனிஷ்க் இந்து முஸ்லிம் இணையினர் திருமண வாழ்வை அடிப்படையாக வைத்து ஒரு விளம்பரத்தைத் தயாரித்து இருந்தது. விளம்பரத்தின் சாரம் என்னவென்றால் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறார் (அந்தக் காட்சியிலேயே மாமியார் முஸ்லிம் மருமகள் இந்து என்பது தெரிகிறது).

அந்த வளைகாப்பு நிகழ்ச்சி முழுவதும் இந்து முறைப்படி அமைந்து இருக்கிறது. “இது போன்ற சம்பிரதாயங்களை நீங்கள் கடைப்பிடிக்க மாட்டீர்களே” என மாமியாரை மருமகள் கேட்க, “மகளை சந்தோஷமாக வைத்திருப்பதே ஒவ்வோரு குடும்பத்தின் சம்பிரதாயம்” என்று கூறுகிறார், மாமியார். இவ்வாறாக முடிகிறது அந்த விளம்பரம்.

வெறும் 45 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த விளம்பரம் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம் லவ் ஜிகாத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர். இந்த எதிர்ப்பைக் கண்டு முதலில் காணொலியின் பின்னூட்டங்களை முடக்கிய தனிஷ்க் நிறுவனம் தொடர் எதிர்ப்பின் காரணமாக அந்த விளம்பரப் படத்தையே தன்னுடைய அதிகாரபூர்வப் பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளது.

மேலும் ”கவனக்குறைவாகச் செய்த காரியத்தால் மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டிருந்தால் தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை “ தெரிவிப்பதாக ஒரு அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது தனிஷ்க் நிறுவனம்.

தற்போது இந்த விவகாரத்தைப் பதிவு செய்யும் இந்த வேளையிலே குஜாராத்தில் தனிஷ்க் நிறுவனத்தை ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. கடையின் நிர்வாகியை ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதும்படி கட்டாயப்படுத்தியதாக என்.டி.டி.வி செய்தி தெரிவிக்கிறது.

“ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள தனிஷ்க்கின் விளம்பரம் அவமானகரமானது. காந்திதாம் தனிஷ்க் அது தொடர்பாக கட்ச் மாவட்ட ஹிந்து சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்கிறது” என்ற வாசகத்துடன் கடையின் கதவில் ஒரு போஸ்டரை ஒட்டியிருக்கின்றனர்.

2019-ம் ஆண்டில் ஹோலி பண்டிகையின் போது தனது முஸ்லிம் நண்பனின் உடையில் நிறங்கள் பட்டு விடாமல் பத்திரமாக அழைத்துச் செல்லும் ஒரு சிறுமியைக் காட்டும் விளம்பரமும் இத்தகைய எதிர்ப்பைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிஷ்க் விளம்பரத்துக்கு மத அடிப்படைவாதக் குழுக்களிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும் மற்றொரு புறம் இந்த விளம்பரத்தைத் திரும்பவும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துக்கொண்டே வருகிறது. “இந்தியாவின் அழகே பன்முகத்தன்மை தான். இவர்களது அச்சுறுத்தலுக்கு அடிபணியாதீர்கள்” என்று எழுத்தாளர் சேத்தன் பகத் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்துத்துவ ஆதரவாளரான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இந்த விளம்பரம் லவ் ஜிகாத்தை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்துவது போன்று உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே பாலிவுட்டைச் சார்ந்த ரிச்சா சதா, திவ்யா தத்தா போன்ற நடிகைகள் இந்த விளம்பரப் படத்தை அற்புதமான விளம்பரம். இது தங்களுடைய குரல் என்று வரவேற்றுப் பதிவு செய்தி இருந்தனர். மேலும் இந்த விளம்பரம் நீக்கப்பட்டதற்குத் தங்கள் வருத்தத்தையும் பதிவு செய்திருந்தனர்.

இது போன்ற எதிர்ப்புகள் ஆதரவுகள் ஒருபுறம் இருக்க advertising standards council of india ASCI எனப்படும் விளம்பரங்களின் தர நிர்ணயம் செய்யும் குழு இந்த விளம்பரத்திற்கு எதிராகத் தங்களுக்கு அனுப்பப்பட்ட மனுவை நிராகரித்துள்ளது. “இந்த விளம்பரம் தாங்கள் விதித்துள்ள எந்த விதிகளுக்கும் புறம்பாகவும் இல்லை” என்றும் “இந்த விளம்பரத்தில் அநாகரிகமான காட்சிகளோ சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் எந்த அம்சமும் இல்லை” எனவும் “இந்த விளம்பரத்தைத் தயாரித்த நிறுவனம் விரும்பினால் இதைப் பொதுவில் வெளியிட எந்தத் தடையும் இல்லை”  என்று ஒருமனதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்