Aran Sei

தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் 18 பேர் விடுதலை – சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

கொரோனா முழு அடைப்பு விதிமுறைகளை மீறியதாக, பீகாரின் அராரியா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக, வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று பாட்னா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வேறு எந்த வழக்கிலும் மேற்சொன்ன பதினெட்டு பேர் ஈடுபடவில்லை எனும் பட்சத்தில் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க அவசியமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசை அறிவுறுத்தியுள்ளது.

‘குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவும் இல்லை’ – தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை

அராரியா மாவட்டத்தில், விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்ததாக வெளிநாட்டினர் மீது, அராரிய சதார் மற்றும் நர்பர்கஞ்ச் காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் ஒன்பது மலேசியர்கள் உள்ளூரில் இருக்கும் ஜமா மசூதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்; ஒன்பது பங்களாதேஷ் மக்கள் ரேவாகி மர்காஸில் இருந்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்ளூரில் தங்கியிருப்பது குறித்து தகவல் அளிக்காததற்கு மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்சொன்ன பதினெட்டு பேரும், முழு அடைப்பு நடைமுறை செய்யப்படுவதற்கு முன்னரே (மார்ச் 11 மற்றும் மார்ச் 23 தேதிகளில்) அராரியாவிற்கு வந்தவர்கள். தப்லீக்-ஜமாத் கூட்டம் நடப்பதற்கு முன் நிசாமூதின் மர்காஸிற்கு சென்று வந்தவர்கள்.

தப்லீக்-ஜமாத் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை பரிசோதனை செய்து, தனிமைபடுத்தி, நாட்டிற்கு அனுப்புங்கள் என்று உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்ட போதிலும், அந்நிகழ்விற்கு தொடர்பே இல்லாத இந்த 18 பேருக்கு எதிராக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.  கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது.

“ஆதாரம் இல்லை”- வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு

மாவட்டத்தின் அமர்வு நீதிமன்றம், ஜூன் மாதத்திலேயே இவர்களுக்கு ஜாமீன் அளித்துவிட்டாலும், வழக்கு முடியும் வரை சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி, ஜாமீன் கிடைத்த பிறகு 18 பேரும் அராரியாவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தனர்.

“முழு அடைப்புகளினால் விசாரணை மெதுவாக நடந்து கொண்டிருந்தது.அதனால், பாட்னா நீதிமன்றத்தில் குற்றவியல் ரிட் மனு தாக்கல் செய்தோம்” என வெளிநாட்டினர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான ச.ஏ.முஜாஹீத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம், “ முழு அடைப்பு நடைமுறை செய்யப்படுவதற்கு முன்னரே இவர்கள் மர்காஸிலும், மசூதியிலும் தங்கியிருந்தனர். முழு அடைப்பிற்கு முன் இவர்கள் மதப்பணியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் அடையாளம் காணவில்லை. விசாரணையின் போதும் கூட, இவர்கள் மதப்பணியில் ஈடுபட்டதற்கு எந்த சாட்சியத்தையும் காவல்துறை சேகரிக்கவில்லை” என்று சொல்லி வெளிநாட்டினரை விடுதலை செய்தது.

தப்லிகி ஜமாத் வழக்கு – சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிப் பெண்

முழு அடைப்பு தொடங்கிய போது தப்லீக் ஜமாத் தான் கொரோனாவை பரப்பியதாக பிரதான ஊடக நிறுவனங்கள் இஸ்லாமியர்களை அவமரியாதை செய்தன. மர்காஸிற்கு வந்தவர்கள் நாடு முழுவதும் பயணித்து கொரோனாவை பரப்புகிறார்கள் என்று ஊடகம் தெரிவித்ததால், இஸ்லாமியர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.

நாலந்தாவில், பஜ்ரங் தால் அமைப்பினர் இந்து கடைகளில் காவி கொடியை தொங்கவிட்டு, இந்துக்கள் இந்துக்களின் கடைகளில் தான் பொருட்களை வாங்க வேண்டும் எனவும், இஸ்லாமியர்கள் கொரோனாவை பரப்புகிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( தி வயர் தளத்தில் வெளியான சிறப்பு செய்தியின் சுருக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்