Aran Sei

“சுஷாந்தின் மரணம் ஒரு தற்கொலைதான்” – எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா

Image Credits: Deccan Herald

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை அல்ல; தற்கொலை என்று அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை மறு பரிசீலனை செய்த எய்ம்ஸ் குழுவின் தலைவரான மருத்துவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஒரு கொலை விசாரணையைத் தொடங்குமாறு சுஷாந்தின் குடும்பத்தினர் உட்பட பலர் மத்தியப் புலனாய்வுப் பிரிவை (சிபிஐ) வலியுறுத்தி வந்தனர்.

ஜூன் 14 அன்று சுஷாந்த் தனது இல்லத்தில் இறந்து கிடந்தார். சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரவர்த்தி அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், அவரது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த வழக்கின் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் ரியா தற்போது சிறையில் உள்ளார்.

“சுஷாந்த் மரணம் தற்கொலைதான். கொலை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது,” என்று மருத்துவர் சுதிர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 29 அன்று, எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை சிபிஐக்குச் சமர்ப்பித்திருந்தனர். “தூக்கில் தொங்கியதை தவிர உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இறந்தவரின் உடலில் சண்டையிட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை,” என்று அவர் ஏஎன்ஐயிடம் கூறியுள்ளார்.

“பம்பாய் எஃப்எஸ்எல் மற்றும் எய்ம்ஸ் ஆய்வகத்தால் எந்தவொரு போதை பொருள் சுவடு இருப்பதையும் கண்டறிய முடியவில்லை. முழுமையான பரிசோதனையின்போது கழுத்தில் வெட்டப்பட்ட அடையாளம், துக்குக் கயிறால் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு ஒத்ததாக இருந்தது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ கையகப்படுத்துவதற்கு முன்னர், மும்பைக் காவல்துறையினர் சுஷாந்தின் மரணத்தைத் தற்கொலை என்று பதிவுசெய்தனர். சிபிஐ “தற்கொலைக்குத் தூண்டுதல்” தொடர்பான விசாரணையைத் தொடரக்கூடும் என்று என்டிடிவி செய்தி தெரிவித்தது.

“இதுவரை, இது ஒரு கொலை வழக்கு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. விசாரணையின்போது, ​​எங்களுக்கு ஆதாரம் கிடைத்தால், கொலைக் குற்றச்சாட்டும் சேர்க்கப்படும். தற்போது, எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்ட தற்கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுகின்றன,” என்று சிபிஐ கூறியதாக அந்தச் செய்தியில் வெளியாகி இருந்தது.

சுஷாந்தின் தந்தை தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங், சுஷாந்தின் கழுத்தில் உள்ள அறுப்புக் காய அடையாளங்கள் கழுத்து நெருப்புக்கு ஒத்ததாக இருப்பதை அவரிடம் எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கூறியதாக முன்னர் கூறியிருந்தார். “சுஷாந்தின் மரணம் கழுத்து நெறிவால் ஏற்பட்டுள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவர் என்னிடம் கூறினார்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மருத்துவர் சுதிர் இந்தக் கூற்றுகளை மறுத்தார். “படுகொலை அல்லது தற்கொலை பற்றிய எந்த முடிவும் அல்லது முடிவான கருத்தும் காயத் தடயங்களைப் பார்த்தோ நிகழ்வின் இடத்தைக் கண்டோ எடுக்க முடியாது. இது மருத்துவர்களுக்குக் கடினம், பொது மக்களுக்குச் சாத்தியமற்றது. இதற்கு முழு உள் விவரமும், தடயவியல் விளக்கம் தேவை,” என்று அவர் கூறியுள்ளார்.

ரியா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே, சிபிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காகக் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார். “உண்மையை மாற்ற முடியாது, சிபிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறியதாக சிஎன்என்-நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்