Aran Sei

இஸ்ரோவுக்கு அமெரிக்கா விதித்த 9 ஆயிரம் கோடி இழப்பீடு – உச்சநீதி மன்றம் தடை

credits : pti

செயற்கைக்கோள் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்காக பெங்களூரைச் சேர்ந்த  தேவாஸ் மல்டிமீடியாவிற்கு $120 கோடி (சுமார் ரூ.9,000 கோடி) இழப்பீடு வழங்குமாறு இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

2005-ம் ஆண்டு ஜனவரி மாதம், இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கி, விண்ணில் செலுத்தி அதை பராமரிக்கும் ஒப்பந்தத்தை  தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனுடன் செய்து கொண்டது. இதன் மூலம் தேவாஸ் நிறுவனத்திற்கு 70 மெகாஹெர்ட்ஸ் எஸ் பேண்ட் அலைவரிசை கிடைக்கும் என்றும் அதன் மூலம் அந்த நிறுவனம் ஒருங்கிணைந்த செயற்கைகோள் தொலைதொடர்பை இந்தியா முழுவதும் வழங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தத்தை ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, தேவாஸ் நிறுவனம் சட்ட நிவாரணம் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தீர்ப்பாயத்தையும் அணுகியது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம், ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனுக்கு எதிராக வழக்குதொடர்ந்தது. அந்த மனுவில், இந்த வழக்கை ஏற்கனவே மூன்று சர்வதேச தீர்ப்பாயங்களும், 9 சமரச தீர்வு மையங்களும் விசாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவை அனைத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தவறு என்று கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு தீர்ப்பாயம் ‘இது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துவதாக’ கூறியதாகவும், மற்றொரு தீர்ப்பாயம், ‘இந்தியா அடிப்படையான நம்பிக்கையை மீறியுள்ளது’ என்று கூறியதாகவும் மனுவில் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் தெரிவித்திருந்தது.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த வழக்கை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்ற வாதத்தை ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் முன்வைத்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், விசாரணைக்கு ஓராண்டு தடை விதித்ததுடன், இரண்டு தரப்பும் 2020 ஏப்ரல் 15-ம் தேதிக்குள், கூட்டறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஆண்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் நிறுவனங்கள் கூட்டறிக்கையை தாக்கல் செய்தன.

தேவாஸ் மல்டிமீடியா தனது அறிக்கையில், ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் வாஷிங்டன் மாவட்டத்தில் வர்த்தகம் செய்வதுடன், அமெரிக்கா முழுவதும் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதை சுட்டிக்காட்டி, ஆகவே, இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் விசாரிக்க உரிமை உள்ளது என்று கூறியிருந்தது.

அமெரிக்க நிறுவனங்கள் சிலவற்றுடன் ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும், அதன் அடிப்படையில் இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டிருப்பதையும் தேவாஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் அறிவித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தது. மத்திய அரசின் கொள்கை முடிவில் அடிப்படையில், இந்திய அரசுக்கு உள்ள இறையண்மை உரிமையின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டன் மாவட்ட நீதிபதி தாமஸ் எஸ் சில்லி, கடந்த 27-ம் தேதி வழங்கியுள்ள தீர்ப்பில், ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தேவாஸ் மல்டிமீடியாவுக்கு $56.25 கோடி (சுமார் ரூ.4200 கோடி) இழப்பீடாகவும், வட்டியுடன் சேர்த்து $120 கோடி (சுமார் ரூ.9000 கோடி) வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பெங்களுரு நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்