Aran Sei

” உச்சநீதிமன்ற கருத்து தார்மீக வெற்றி ” – போராடும் விவசாயிகள்

Image Credit : thehindu.in

“விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகளும், அரசு பிரதிநிதிகளும் கொண்ட குழு அமைக்க வேண்டும்” என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து தங்களுக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்று போராடும் விவசாய சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அத்தகைய கமிட்டி, இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்த பிறகுதான் பலனளிப்பதாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு 22-வது நாளாக போராடி வரும் விவசாயிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை நேற்று தொடங்கியது உச்சநீதிமன்றம்.

“அரசுக்கும் விவசாய தலைவர்களுக்கும் இடையேயான பேச்சு எந்த தீர்வையும் எட்டவில்லை” என்பதையும், “அவை தோல்வியடையத்தான் போகின்றன” என்பதையும் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்ற அமர்வு நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் கமிட்டியை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது.

விவசாயிகளின் நிலையை கண்டு மனமுடைந்து சாது தற்கொலை – அரசு அநீதி இழைத்துள்ளதாக கடிதம்

அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், “மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற்ற பிறகு, அனைத்து அகில இந்திய மற்றும் பிராந்திய விவசாய அமைப்புகளை இணைத்து கமிட்டி அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

விவசாயிகளை போராட்டத்திலிருந்து நீக்குவது மீதான தனது விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடர்கிறது என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

போராட்டங்களை முடித்து வைப்பதற்காக, அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வைத்து நாடகம் ஆடுகிறது என்று சில விவசாயத் தலைவர்கள் கூறுவதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

“உச்சநீதிமன்றம் இந்த மூன்று சட்டங்களும் அரசியல் சட்டப்படி செல்லுபடியாகிறவையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இந்த சட்டங்கள் நடைமுறை சாத்தியமானவையா, தேவையானவையா என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” என்று சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

நேற்று மத்திய பிரதேசம் குவாலியரில், பாஜக ஏற்பாடு செய்த ஒரு “விவசாய கூட்டத்தில்” பேசிய ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திர தோமர், பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாகக் கூறியுள்ளார். “விவசாயிகளின் போர்வையில் தேச நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவகளை தடுத்து நிறுத்தி நமது தலைவரின் கௌரவத்தை சீர்குலைக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி முயற்சித்தால், நாங்களும் தக்க பதில் கொடுப்போம்” என்றும் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, போராடும் விவசாய குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா, டிசம்பர் 9-ம் தேதி விவசாய அமைச்சகம் அனுப்பி வைத்த சமரச திட்டத்தை முறையாக நிராகரித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

விவசாயிகள், இந்த சமரச திட்டத்தை ஏற்கனவே வாய் வழியாக நிராகரித்து விட்டனர் என்பது பல சுற்று பேச்சுவார்த்தைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதை மின்னஞ்சல் சுட்டிக் காட்டுகிறது.

“அரசு விவசாயிகள் இயக்கத்தின் மீது அவதூறு செய்வதையும், போராட்டத்தில் பங்கேற்காத பிற விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று மின்னஞ்சலில் கோரப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலை சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் தர்ஷன் பால் அனுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்