ஸ்டேட் வங்கி எழுத்தர் (கிளார்க்) பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மத்திய சமுக நீதித்துறை அமைச்சருக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், ஸ்டேட் வங்கி ஜூனியர் அசோசியேட் (இளநிலை அலுவலர்) பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்றது. நேற்று (அக்டோபர் 21) அதற்கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
சந்தேகம் எழுப்பும் கட் ஆஃப் மதிப்பெண்
அதில் பொதுப் பிரிவு மற்றும் ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கட்- ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுப் பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 62 எனவும், ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினருக்கும் அதே 62 மதிப்பெண்ணே கட் ஆஃப் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 மதிப்பெண் ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக உள்ளது. அதாவது 57.75 மதிப்பெண் ஆக உள்ளது.
இது குறித்து, மத்திய சமுக நீதித்துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
“இந்த கட் ஆஃப் விவரங்கள் சமூக யதாரத்தங்களோடு பொருந்துவதாக இல்லாததாலும் எல்லோருடைய கட் ஆஃப் விவரங்களும் தேர்ச்சி பெற்றோர் பட்டியலோடு வெளியிடப்படாமல் தனித்தனியாக அவரவர்களுக்கு கட் ஆஃப் விவரங்கள் அனுப்பப்படுவதாலும் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது” என்று அதில் கூறியுள்ளார்.
ஐ.பி.பி.எஸ் அமைப்பு
இந்தத் தேர்வுகளை நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை வங்கிகளுக்கு வழங்கும் ஐ.பி.பி.எஸ் (IBPS) என்ற அமைப்பினைப் பற்றி கடிதத்தில் குறிப்பிடும் போது, “ஐ.பி.பி.எஸ் அமைப்பு ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
எழும் கேள்விகள்
நேற்று வெளியான தேர்வு முடிவுகள் குறித்தும், அதில் பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீடு முறைகள் குறித்தும் ஒன்பது கேள்விகளை, மத்திய சமூக நீதித்துறை அமைச்சரை நோக்கி எழுப்பியுள்ளார்.
1) ஏன் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் முழுமையாக ஒவ்வொரு தனிநபர் கட் ஆஃப் மதிப்பெண்ணோடும், அவர்கள் சார்ந்துள்ள பிரிவு விவரங்களோடும் பொதுவில் வெளியிடக் கூடாது?
2) பொதுப் பிரிவு பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேலாகப் பெறும் போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா?
3) மேற்கூறிய கேள்விக்கான விடை ‘ஆம்’ எனில், எவ்வாறு பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர் கட் ஆஃப் ஒரே அளவில் உள்ளன?
4) தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொதுப் பிரிவில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி, இ.டபிள்யூ.எஸ் பிரிவைச் சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்?
5) இட ஒதுக்கீட்டுப் பிரிவில் தேர்வு பெற்றவர்களின் கட் ஆஃப் எதில் துவங்கி எதில் முடிவடைகிறது?
6) இ.டபிள்யூ.எஸ் பிரிவின் கட் ஆஃப், எஸ்.டி கட் ஆஃப்-யை விடக் குறைவாக உள்ளது. எவ்வளவு இ.டபிள்யூ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்றனர்? எவ்வளவு பேர் துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்?
7) எவ்வளவு பேர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இட ஒதுக்கிட்டுப் பிரிவைச் சாராதவர்கள் தேர்வில் இடம் பெற்றனர்? எவ்வளவு பேர் துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்? பிரிவு வாரியாக விவரங்கள் வேண்டும்.
8) இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் இடம் பெறும் நிலை வந்தால், அதற்கு என்ன என்ன விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறது?
இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றி வெளிப்படையான அணுகுமுறையும், சமூகத் தணிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சு.வெங்கடேசன், இந்தக் கேள்விகளை மத்திய சமூக நிதித்துறை அமைச்சருக்கு மட்டுமன்றி, நிதிஅமைச்சர், ஸ்டேட் வங்கி தலைவர், ஐ.பி.பி.எஸ் அமைப்பின் தலைவர் போன்றோருக்கும் அனுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.