“பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்புவது ஒரு வழக்கமாக மாறிவிட்டது” என்று மாவட்ட நீதிபதியின் மீதான ஒழுங்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேவாஸ் மாவட்ட நீதிபதியான சம்பூசிங் ரகுவன்ஷிக்கு எதிராக பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் (Gender Sensitization Internal Complaint Committee) நீதித்துறை பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி இதனை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. நீதிபதியின் மீது ஒழுங்கு விசாரணை மேற்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கக் கோரி, குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியம் அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் ,“மனுதாரர் 32 ஆண்டு காலமாக நீதித்துறையில் சேவை புரிந்தவர் என்றும், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யப்பட உள்ள நிலையில் அவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.” என்று கூறினார்.
“மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்கிற அடிப்படையில் முறையான அறிவிப்பு ஏதுமில்லாமல் விசாரணை நடத்தியதில் மனுதாரர் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்” என்றும் பாலசுப்பிரமணியம் வாதிட்டார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “நம் நீதித்துறையில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் தருவாயில் இப்படியான புகார்கள் எழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, குற்றம் சுமத்தப்பட்ட நீதிபதி மீதான ஒழுங்கு விசாரணைக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக 22 நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ரஞ்ஜன் கோகாய் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவரது தலைமையின் கீழே, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜீ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டவரின் தலைமையிலே விசாரணை குழுவானது அமைக்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது.
2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மட்டுமே அதற்கான விசாரணையை மேற்கோள்ள வேண்டும்.
இதனால் ”ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்” என புகார் அளித்த பெண் வலியுறுத்தினார். ஆனால் ரஞ்ஜன் கோகாய் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவே விசாரணையை நடத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக ரஞ்ஜன் கோகாய் ”என் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் புகாரை நான் மறுக்கிறேன். நான் பல முக்கிய வழக்குகளை விசாரிப்பதால் இப்படியான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளேன். இதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருக்கிறது. நீதித்துறையின் மீது களங்கம் உருவாக்கவே என் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக நவீன் குமார் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தாக புகாரளித்த பெண் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக அந்தப் பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். நேரில் ஆஜராகுமாறு அந்த பெண் மீது புகாரளித்த நவீன் குமாருக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், டெல்லி காவல் துறையினர் குறிப்பிடப்பட்ட முகவரியில் நவீன் குமார் என்பவர் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறினர்.
இது தொடர்பாக,“ தலைமை நீதிபதியின் மீது புகாரளித்த காரணத்தால் பழிவாங்கும் நோக்கில் என்மீது பணமோசடி புகார் எழுந்துள்ளது” என அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு, கோகாய் மீதான பாலியல் அத்துமீறல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது.
இதேபோல், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான ஏ.கே.கங்குலி நீதிபதியாக பணியாற்றிய சமயத்தில் அவரிடம் பயிற்சி பெற்று வந்த சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து ஜர்னல் ஆஃப் இந்தியன் லா அன்ட் சொசைட்டிஸ் –ஐ சார்ந்த இணையதளத்தில் அந்தப் பெண் எழுதியதன் பிறகு இந்த பிரச்சினை வெளி உலகிற்கு தெரிய வந்தது.
வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவும், அரசு வழக்கறிஞர் வாகன்வதியும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கினை விசாரிகக அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
குற்றம்சாட்டியப் பெண் ”விடுமுறை நாளில் கூட வந்து ஆர்வத்தோடு பயிற்சி பெற்ற எனக்கு பாலியல் அத்துமீறல் தான் பரிசாக கிடைத்தது. என்னைப் போலவே மேலும் மூன்று பெண்கள் நீதிபதி ஏ.கே.கங்குலியால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது எதிர்கால நலன் கருதி புகாரளிக்க முன் வரவில்லை” எனக் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி கங்குலி பதவி விலக வேண்டுமென்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் முகோபாத்யாயா, பாரத் பச்சோ சங்கதன் எனும் தன்னார்வக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்பினர் கோரிக்கையை முன்வைத்தனர். அதற்கு நீதிபதி கங்குலி “பதவி விலகுவது குறித்து யோசனை இல்லை” என்று பதிலளித்தார்.
”என்னுடைய வீட்டுக்கு பலமுறை அப்பெண் வந்துள்ளார். அவருடைய இணைய பக்கத்தில் கூட என்னை மிகவும் மதிப்பாகத்தான் சொல்லியிருந்தார். என் மகளைப் போலதான் அவரை நடத்தி இருக்கிறேன். இப்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது வருத்தமளிக்கிறது. நீதிபதிகள் மீது இப்படியான புகார்களை எழுப்பினால் நாங்கள் பணிபுரிவதே கடினம். இந்நிலைமை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்” என்று நீதிபதி கங்குலி கூறினார்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமனிடம் கேட்ட பொழுது “சிறுமிகள், பெண்கள் வன்புணர்விற்கு ஆளாவதை தினசரி செய்திகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி இருக்கையில் பாலியல் குற்றச்சாட்டுகளை ஒரேடியாக புறந்தள்ளிவிட முடியாது. பெண்கள் இப்போதுதான் வெளியே வந்து தங்கள் பிரச்சினை குறித்து பேசவே செய்கிறார்கள். எல்லா விசயத்திலும் போலிக் குற்றச்சாட்டு என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி குற்றச்சாட்டு எழுப்பபடும்போது அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்.” என்று கூறினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.