Aran Sei

`ஸ்டேன் சாமி நிரபராதி’ – அருட் தந்தைகள் ஆதரவு

பீமா கோரேகான் வழக்கில் தேசியப் புலானய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ள 83 வயது ஸ்டேன் சாமி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் பணியாற்றிய `ஏசு சபையின் சமூகம்’ தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, மஹராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநகர்ப் பகுதியான பீமா கோரேகான் என்ற இடத்தில், பேஷ்வாக்களை, ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்ட பீமா கோரேகான் போரின் 200 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிகழ்வு குறித்து விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு முககை, ஸ்டேன் சாமியைக் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், ஸ்டேன் சாமி கடந்த 15 ஆண்டுகளில் புனே நகருக்குச் சென்றதில்லை என்று அவரோடு பணியாற்றும் அருட் தந்தை ஜோசப் சேவியர் தி வயர் இணையதளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

“செய்தித்தாளைப் படித்துதான் அவர் பீமா கோரேகான் நிகழ்வையே தெரிந்துகொண்டார். ஸ்டேன் சாமிக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரானவர். அவர் அரசியல் சாசன அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்” என்று பெங்களூருவில் உள்ள இந்தியச் சமூக நிறுவனத்தில் பணியாற்றும் ஜோசப் சேவியர் கூறியுள்ளார்.

“அவர் அரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தது என்ஐஏவுக்குத் தெரியும். ஆகவே அவர் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்.” என்று அருட் தந்தை ஜோசப் சேவியர் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்டேன் சாமியின் கைது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல என்றும் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்றும் மற்றொரு அருட் தந்தை ஜார்ஜ் பட்டேரி தி வயர் – ரிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்டேன் சாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில், பழங்குடியினர் கிராமத்தில் அமையவிருந்த சிராய் இரும்புச் சுரங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர். இதேபோல் ‘கோய்ல் காரா’ அணையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும், இந்திய ராணுவம் சார்பாக அமைக்கப்படவிருந்த ‘நேத்ரஹாட்’ துப்பாக்கி பயிற்சி தளத்திற்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களில் முன்னணியில் நின்றவர்.

ஆயிரக்கணக்கான பழங்குடியினரை இடப்பெயர்வு செய்யும் ‘நேத்ரஹாட்’ திட்டத்தை, பழங்குடியினரின் மிகப்பெரிய எதிர்ப்பின் காரணமாக இந்திய ராணுவம் கைவிட்டது.

“அவர் பழங்குடியினர் வெளியேற்றப்படுவதை எதிர்த்தார். அது அரசைக் கோபமடையச் செய்தது” என்று ஜார்கண்டில் ஸ்டேன் சாமியுடன் பணியாற்றிய அருட் தந்தை சாக்கோ தெரிவித்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தலை எதிர்த்துப் போராடிய அல்லது மாவோயிஸ்ட்டுகளுக்குத் தகவல் அளிப்பவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படும் பழங்குடியினருக்கு ஸ்டேன் சாமி உதவியதாகவும் சாக்கோ தெரிவித்துள்ளார்.

ஸ்டேன் சாமியின் உதவியால், ‘ஜார்க்கண்டின் விசாரணைக் கைதிகள்’ என்ற பெயரில் ஓர் ஆய்வறிக்கை வெளியானது என்று கூறியுள்ள சாக்கோ அதில், நக்சலைட்டுகள் என்ற பெயரில் உள்ள விசாரணைக் கைதிகள் குறித்த ஸ்டேன் சாமியின் முடிவு அரசுக்குச் சங்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டின் 18 மாவட்டங்களில் நக்சலைட்டுகள் என்ற பெயரில் சிறையில் உள்ள 108 கைதிகள் குறித்த ஆய்வில், பெரும்பாலும் அவர்கள் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) போன்ற கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஸ்டேன் சாமியின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஸ்டேன் சாமியிடம் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது ‘பச்சை வேட்டை’ (Operation green hunt) (மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை) மற்றும் பீமா கோரேகான் நிகழ்வு குறித்து தொடர்ந்து கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூட பீமா கோரேகானுக்குச் சென்றதில்லை என்று கூறியதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்டேன் சாமியின் கம்ப்யூட்டரிலிருந்து ‘எர்த் சம்மிட்’ என்ற பெயரில் ஒரு கடிதத்தைக் கைப்பற்றியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் “இந்திய அரசு மேலும், மேலும் பாசிசமாக மாறிவருவதால், அரசின் பாசிசத்தை எதிர்கொள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இணைய வேண்டிய தேவை உள்ளது. இதைச் செய்ய நமக்குக் குறைந்தபட்சம் 60 லட்சம் முதல் 1 கோடி டாலர் தேவை. இந்த வேலைகள் அனைத்தும் அருட் தந்தை ஸ்டேனின் மேற்பார்வையில் நடக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ கூறியுள்ளது.

ஆனால், ஸ்டேன் சாமி இதை முற்றிலும் மறுத்துள்ளார். “இந்தக் கடிதம் என்னுடையதல்ல. இது உருவாக்கப்பட்ட ஒரு கடிதம் என்னுடைய கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டுள்ளது” என்று ஸ்டேன் சாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் விரகலூர் என்ற கிராமத்தில் பிறந்த ஸ்டேன் சாமி பார்க்கின்சன் குறைபாடு உட்பட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர். 1980களில், ஜார்கண்டி மனித உரிமை அமைப்பின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ஸ்டேன் சாமி, 2006ஆம் ஆண்டு, பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக ‘பகைச்சா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்