Aran Sei

கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை – ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு

தேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) சமீபத்தில் கைது செய்யப்பட்ட 83 வயதான ஸ்டான் சுவாமி, ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வேண்டுமென்று சிறப்பு நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்துள்ளார். பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வரும் அவர், சுயமாகத் தண்ணீர்க் குவளையைக் கூட கையில் பிடித்து குடிக்க முடியவில்லை என்ற காரணத்தினால், ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டான் சுவாமி தற்போது சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மனுவிற்குப் பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் 20 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதால் இந்த மனு வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாம்கும்மில் உள்ள பகைச்சா என்னுமிடத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து, கைது ஆணை இல்லாமல் என்ஐஏ-வால் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டதாக தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவரான சுவாமி, மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை அரசு,  முறையாகச் செயல்படுத்த தவறியதைக் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தார். அத்துடன் அடிக்கடி சட்டவிரோதமாகப் பழங்குடி இன இளைஞர்களைக் கைது செய்வதைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்.

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, மருத்துவக் காரணங்களால் ஜாமீன் வேண்டும் என்று ஸ்டான் சுவாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பார்கின்சன் நோயால் அவதிப்படுவதாகவும், அவருடைய இரண்டு காதுகளும் கேட்கும் திறனை இழந்து விட்டன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் இரண்டு முறை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அடிவயிற்றில் பலமான வலியால் துன்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிறை மருத்துவமனையில் பல முறை சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ள அவர் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய ஜாமீன் மனு குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம் “ஜாமீன் வழங்குமாறு மனுதாரர் கேட்டுள்ள காரணங்களில் சிறையில் போதுமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவது இல்லை என்பதைக் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக மனுதாரர் அவருக்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்” என்று கூறியுள்ளது. போதிய வசதிகள் சிறை மருத்துவமனையில் இருப்பதால் அவரது இடைகால ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தலோஜா சிறையின் கண்காணிப்பாளர் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள சிறப்பு நீதிமன்றம் “மனுதாரர் வயதானவர் என்பதால், அவர் சிறை மருத்துவமனையின் மருந்தகப் பிரிவில் உள்ள தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளது. மேலும் சிறைச்சாலையில் சிகிச்சை கிடைக்காத எந்தவொரு நோயாலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை” என்பதை குறிப்பிட்டு மனுவை நிராகரித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கேட்டு ஸ்டான் சாமி தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 26ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் எல்கர் பரிசத் வழக்கில், 16-வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டான் சாமியிடம் அதற்கு முன் பலமுறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்