Aran Sei

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் : சட்டசபையில் நிறைவேற்ற ஸ்டாலின் கோரிக்கை

விவசாய சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து, இன்று (ஜனவரி 1), திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, நேற்று (டிசம்பர் 31) கேரள சட்டப்பேரவையிலும் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

”போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மாஃபியாக்கள்” – தமிழக பாஜக

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சாலைகளிலேயே சமைத்து,  உண்டு, கடந்த 37 நாட்களாகத்  இரவும் பகலுமாக, பல லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்கள் டெல்லி தலைநகரில், திடமான, தீர்மான சிந்தையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டம் குறித்துக் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத, கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

“முதன்முதலில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

“தங்களின் உணர்வுகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிரொலித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குத் தோளோடு தோள் நின்று துணைபுரிய வேண்டும் என்பது, நம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஆழ்ந்த விருப்பமாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய அந்த விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில், பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

’விவசாயி மகனின் அரசு போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுகிறது’ – இரா.முத்தரசன் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்