Aran Sei

விவசாயிகள் போராட்டம் : பழமையான கூட்டணி முறிந்தது

credits:thequint.com

த்திய அரசின் விவசாய மசோதாக்களை எதிர்த்து சிரோமணி அகாலி தளம் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பஞ்சாபில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அகாலி தளம் கட்சியும் தொடர்ந்து மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா 16-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றபட்டது. மறுநாள் மற்ற இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

சிரோமணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில் மறு நாளே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹர்சிம்ரத்தின் பதவிவிலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

கட்சியினரோடு கலந்தாலோசித்த பிறகு மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என அகாலி தளம் கட்சித் தலைவர் கூறியிருந்தார்,

மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேச விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினை மீறி மூன்று வேளாண் மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சனிக்கிழமை சண்டிகரில் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அகாலி தளம் வெளியேறுவதாக அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் சுக்பிர் சிங் “குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தரவாதத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க மத்திய அரசு விடாப்பிடியாக மறுத்து வருகிறது. பஞ்சாப் மற்றும் சீக்கியர்கள் குறித்த பிரச்சனைகளுக்கு மத்திய அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

எனவே, ”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல், “மூன்று கோடி பஞ்சாபிகளின் தொடர் போராட்டங்களையும், வலியையும் மத்திய அரசு உணரவில்லை எனில், இது இனிமேலும் வாஜ்பாய்- பாதல் கனவு கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இல்லை.”

 

”மிக மூத்த கூட்டணிக் கட்சிக்கு செவிமடுக்காத, நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத ஒரு கூட்டணி பஞ்சாபின் நலனுக்கு இனிமேலும் உகந்தது இல்லை” எனவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில முதவர் அமரிந்தர் சிங் “நியாயப்படுத்த முடியாத வகையில் பஞ்சாப் விவசாயிகளைத் தவறாக வழிநடத்திய கடந்த 3 மாத கால வஞ்சகத்தின் வெளிப்பாடே இந்தக் கூட்டணி முறிவு.” எனக் கூறியுள்ளார்.

அகாலி தளம் கட்சி கடந்த 1997-ம் ஆண்டு முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்