Aran Sei

விவசாயிகள் பேரணி – சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ் மீது தேசதுரோக வழக்கு

Image Credit : thenewsminute.com

த்திய அரசின் மூன்று விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, செவ்வாய்க் கிழமை நடந்த குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது, தவறான செய்தியை ட்வீட் செய்ததற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், கேரவன் பத்திரிகையின் வினோத் கே ஜோஸ் ஆகியோர் மீது உத்தர பிரதேச போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

டெல்லி எல்லையில் உள்ள நோய்டாவின் பிரிவு – 20 காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், டிராக்டர் பேரணியின் போது ஒரு விவசாயியின் மரணம் குறித்து தவறான செய்தியை பரப்பும் வகையில், இவர்கள் ட்வீட் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நவ்னீத் சிங் என்ற போராடும் விவசாயி செவ்வாய் கிழமை நடந்த டிராக்டர் பேரணியின் போது அவரது டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். அவர் போலீசால் சுடப்பட்டார் என்று சில விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து குடியரசு தின பேரணியில் பங்கேற்ற விவசாயி போலீஸ் சுட்டதில் உயிரிழந்ததாக இந்தியா டுடேவின் ஆலோசனை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் ட்வீட் செய்திருந்தார். ஆனால், அந்த விவசாயி ஒரு விபத்தில் உயிரிழந்ததாக கூறும் போலீஸ் அது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோ வெளியான பிறகு ராஜ்தீப் சர்தேசாய் தனது தவறை திருத்திக் கொண்டு போலீஸ் வீடியோவை ட்வீட் செய்திருந்தார். அதே நாளில் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் அவர் போலீசின் வீடியோவை உறுதி செய்திருந்தார்.

நோய்டாவைச் சேர்ந்த அர்ப்பித் மிஷ்ரா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜ்தீப் சர்தேசாய் மீதும் பிற ஊடகவியலாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நியூஸ் மினிட் செய்தி தெரிவிக்கிறது. இந்த முதல் தகவல் அறிக்கையில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜஃபர் ஆகா, காரவன் பத்திரிகையின் ஆசிரியர் ஆனந்த் நாத் ஆகியோர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்திரிகையாளர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153A, 153B, 295A, 298, 504, 506, 505(2) 124-A, 34, 120-B ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 66-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்தீப் சர்தேசாய் தவறான தகவலை பரப்பியதற்காக இந்தியா டுடே அவரை இரண்டு வாரங்களுக்கு ஒளிபரப்பிலிருந்து நீக்கியுள்ளது, மேலும் ஒரு மாத சம்பளத்தை வெட்டியுள்ளது என்று நியூஸ் மினிட் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்