Aran Sei

“மகாராஷ்டிரா ஆளுநர், பதவியின் தரத்தை சீர்குலைப்பதா?” – சரத் பவார் கேள்வி

Image Credits: DNA India

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், கோயில்களை மீண்டும் திறக்கக் கூடாது எனும் முடிவிலுள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்குக் கடிதம் எழுதிருந்தார்.

கோயில்கள் தொடர்ந்து மூடப்படுவதால். ஆளுநர் பகத் சிங் முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் திடீரென்று ‘மதச்சார்பற்றவராக’ மாறிவிட்டீர்களா,” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

“கோயில்கள் திறப்பதைத் தள்ளிப்போட வேண்டும் என எதுவும் அசரீரி கேட்கிறதா? அல்லது திடீரென நீங்கள் மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா? உங்களுக்கு அந்த வார்த்தையே பிடிக்காதே.” என்று முதல்வரின் இந்துத்துவக் கொள்கை  குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனை விமர்சித்த சரத் பவார், ஆளுநர் என்ற உயர் அரசியலமைப்பு பதவியின் நடத்தை தரம் சீர்குலைவதுதான் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். “ஆளுநரின் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதையும், அதில் எந்த வகையான மொழி பயன்படுத்தப்பட்டது என்பதையும் கண்டு நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்” என்று சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நம் அரசியலமைப்பின் முன்னுரையில், “மதச்சார்பற்ற” என்ற சொல் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கிறது. எனவே முதலமைச்சர் அரசியலமைப்பின் அத்தகைய கொள்கைகளை ஆதரிக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு எழுதப்பட்டதைப் போலவே உள்ளது” என்று சரத் பவார் கூறியுள்ளார்.

ஆளுநரின் கடிதத்துக்குப் பதிலளித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, “கோயில்களைத் திறப்பது இந்துத்துவா என்றும் அவற்றை திறக்காதது மதச்சார்பின்மை என்றும் நீங்கள் கருதுகிறீர்களா? நீங்கள் ஆளுநராக பதவியேற்ற அரசியலமைப்பு எதற்கானது? மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் முக்கிய அம்சமாகும். நீங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லையா?” என்று கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆளுநர் அவர்களால் ‘பயன்படுத்தப்பட்ட வன்முறையான மொழியை நீங்களும் கவனித்திருப்பீர்கள்’ என்றார்.

“பயன்படுத்தப்படும் வார்த்தையும் தொனியும் எப்போதும் ஒரு தனிநபர் வகிக்கும் அரசியலமைப்புப் பதவியின் நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். நிகழ்வுகளைப் பார்த்தபோது, முதலமைச்சருக்கு அவரது பதிலை பத்திரிகைகளில் வெளியிட்டதைத் தவிர வேறு வழியில்லை என்பது தெரிகிறது,” என்று சரத் பவார் கூறியுள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் இரு நபர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்வதை தான் எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் அறிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று மகாராஷ்டிரா காங்கிரசும் கூறியுள்ளது. “ஆளுநர் அரசியலமைப்பையும் அது அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் சீண்டியுள்ளார். நான் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்க மாட்டேன். ஆனால் வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அவர் கவனமாக இருக்க வேண்டும்,” என்று மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய்த்துறை அமைச்சருமான பாலாசாகேப் தோரத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்